42
“இந்திர ராயிங் குற்ற
இவர்களை யெளிதி லின்று
மந்திரத் தாலே வீழ்த்தும்
மாங்கனிக் கதையாய் மற்றுன்
தந்திரத் தாலே தாக்கித்
தரையில்மண் கவ்வச் செய்தாய் !
சுந்தரி ! யுனது சுத்தச்
சுயத்திறன் சுடர்க !” என்றேன்.
“படித்திட வந்த இந்தப்
பாங்கான இடத்தில் பாய்ந்து
கடித்திட வந்த நாய்மேல்
கல்லொன்றை யெறிந்தேன், கண்டீர் !
முடித்திட வேண்டும், கேட்டு
முறையாக முப்பால் நூலைத்
துடித்திடச் சும்மா பேசித்
தொலைக்காதீர் பொழுதை,” யென்றள்.
“சின்னப்புன் ணகையும் செய்து
சிவந்தகண் ணசைத்தால், சேரத்
தன்னெப்புத் தான்த ராத
தையலும், மையல் மெய்யாய்ப்
‘பொன்னப்பா ! பொழுது போய்நீ
பொறிவண்டாய்ப் பறந்து வந்தால்,
கன்னிப்புட் கரமாய் நானுங்
காத்துள்ளே’ னென்பா” ளென்றேன்.
“பொழிலிலே பொய்கை யாய்நீர்
பொருந்திடப் புரிந்தா லென்னை,
விழியிலே வேட்கை வீறு
வெளிப்படின், விண்வில் லென்ன,
மொழியிலே முறுவல் பூத்‘தென்
மோகனப் பொன்வண் டே!நான்
கழியிலே கமல மாகிக்
காத்துள்ளே’ னென்பே” னென்றள்.