58
செருவந்து சேரி னென்னே !
சிறுமைவந் துறினு மென்னே !
தெருவந்து கூடித் தின்றுத்
தேக்கிட்டுச் செலினு மென்னே !
அரவிந்த மதனை விட்டிங்
கல்லியென் னும்பே ரோடித்
திருவந்தென் அகத்தில் தங்கித்
திகட்டாத்தே னன ளின்றே !
காதலோ காதல் ! காதல்
கைகூடும் வரையும் காத்து
நோதலோ நோதல் ! நோதல்
நுவலுதற் கியலா தாகி
வேதலோ வேதல் ! வேதல்
வேதனை வெளிக்காட் டாது
சாதலோ சாதல் ! சாதல்
சாத்திய மாக்கும் காதல் !
வான்தொட வந்தால் மற்றிவ்
வையகம் மறுக்குங் கொல்லோ ?
தேன்தொட வந்தால் ஈயைத்
திகைப்பிக்கும் பூவொன் றுண்டோ ?
தான்தொட லாமாம், என்றன்
தலைமுகந் தனையும் ! தன்னை
நான்தொட லாகா தாமிஞ்
ஞாலத்தி லிதுவா ஞாயம் ?
உறக்கமும் வருமா றில்லை ;
உண்ணவு முறுமா றில்லை ;
‘மறக்கவும் மறக்கே’ னென்னும்
மனத்தினி லிருந்திம் மாதைத்
துறக்கவும் தோன்ற வில்லை ;
துர்மலர் தனைத்தொ டாதிங்
கிறக்கவும் இயலா தாயின்,
இனியெதைச் செய்வ தோநான் !