பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

33

வணங்குபவர். பிள்ளையார் கோயிலுக்கும் போவார். அனுமார் கோவிலுக்கும் போவார். சர்ச்சுக்கும் போவார், மசூதிக்கும் செல்வார், வீட்டில் அவர் பூசையறையில் நூறு படங்கள் இருக்கும். அத்தனையும் துடைத்துப் பொட்டு வைத்துப் பூவைத்துப் பூசைசெய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். எந்த அலுவலகத்துக்குச் சென்றாலும் அலுவலக வாயிலில் இரண்டு நிமிடம் நின்று பிரார்த்தனை செய்து விட்டுத்தான் படி ஏறுவார்.

அப்படிப்பட்ட அவர் என்னை அழைத்தார், "பெரியார் கூட்டங்களை நீதான் நடத்துகிறாயாமே?" என்று கேட்டார்.

"ஆமாம்!"என்றேன்.

என்னைக் கண்டிக்கப் போகிறாரோ, போகக் கூடாது என்று கட்டளையிடப் போகிறாரோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது.

"உன்னை நான் தடுக்கப் போவதில்லை. உன் சுதந்திரத்தில் நான் தலையிடப் போவதில்லை, ஆனால், என் வேலைக்கு ஊறு நேராமல் பார்த்துக் கொள்" என்றார். அவர் பெருந்தன்மையை எண்ணி மன மகிழ்ந்தேன்.

அவர் அனுமதியோடு மாலை 5 மணி முதல் பெரியார் உடன் செல்லும் வேலையில் ஈடுபட்டேன்.

ஒருநாள் மாலை 5 மணிக்குப் பெரியாரைச் சந்திக்கப் போனேன்.

இரங்கூன் நகரில் பெரிய வணிகர்களான 4 முஸ்லிம் பெரியோர்கள் அங்கே காத்துக் கொண்டிருந்தார்கள்.

நான் சென்ற உடனே, அவர்கள் என்னை அணுகி "நாளை நபிகள் நாயகம் பிறந்தநாள், பெரியார் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு அனுமதி வாங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.