பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

35

கருத்துக்களைப் பாராட்டி இந்து மதத்தில் உள்ள மூடப் பழக்கவழக்கங்களைச் சுட்டிக்காட்டிப் பேசி முடித்தார். கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.

"நான் கடவுள் நம்பிக்கை யற்றவன். நீங்கள் கடவுள் நம்பிக்கை யுடையவர்களாய் இருப்பதுபற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நீங்கள் வணங்கும் கடவுள் யோக்கியமான கடவுளாய் இருக்கட்டும்.

"யோக்கியமான கடவுளை வணங்குபவனிடம் தான் யோக்கியனாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற முடியும்"

இந்த அளவில் தான் பெரியார் கடவுள் கொள்கைக்கு ஆதரவு கொடுத்தார். ஒரு கடவுள் கொள்கையுடைய முஸ்லிம்கள் கொண்டாடும் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் போதெல்லாம் இந்த அடிப்படையில் தான் அவருடைய பேச்சுக்கள் அமையும்.

முஸ்லிம்களிடையே உள்ள சில மூடப் பழக்க வழக்கங்களையும், காலத்துக் கொவ்வாத பழக்கங்களையும் அவர் கண்டிக்கவும் பின் வாங்கியதில்லை.

பெரியாரின் சொற்பொழிவு முழுவதும் சொல்லுக்குச் சொல் அப்படியே மறுநாள் 'தொண்டன்' நாளிதழில் வெளி வந்தது.

"தொண்டன்" பர்மா வாழ் முஸ்லிம்களின் இலட்சிய இதழாக விளங்கியது. அதன் ஆசிரியர் இபுராகிம் புது நோக்குடையவர். பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரங்களுக் கெல்லாம் முழு ஆதரவு அளித்து வந்தவர். கழகச் செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு ஆதரவு அளித்து வந்தார்.