பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

பர்மாவில் பெரியார்

"ரசிக ரஞ்சனி" என்று ஒரு தமிழ் நாளிதழ் இரங்கூனிலிருந்து வெளி வந்து கொண்டிருந்தது. தமிழ் மக்களின் பொதுவான பத்திரிகை என்று சொல்ல முடியாதபடி அது மதவெறி இதழாக வெளிவந்தது. அந்த இதழில், பெரியார் கலந்து கொண்ட மற்ற நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு சிறு குறிப்புக் கூட வெளிவரவில்லை.

உலக புத்தசமய மாநாட்டில் பெரியார் கலந்து கொண்ட நிகழ்ச்சியைக் கூட அது வெளியிடவில்லை. ஆனால் நபிகள் நாயகம் பிறந்த நாள் கூட்டத்தில் பெரியார் பேசிய பேச்சை அந்த இதழ், மதவெறி நோக்கோடு வெளியிட்டிருந்தது. மதவெறியைக் கிளப்பி இந்து முஸ்லிம் பகைமையை வளர்க்கும் நோக்குடன் அது செய்தியைத் திரித்து வெளியிட்டது.

தலைப்பிலேயே கொட்டைஎழுத்துக்களில் முஸ்லிம்கள் கூட்டத்தில் இந்து மதத்தைத் தாக்கிப் பிரசங்கம் என்று போட்டிருந்தது.

தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் ராமசாமி நாயக்கர் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் இந்துமதத்தைத் தாக்கிப் பேசினார். இதனால் இந்து மதத்தவர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

இப்படியிருந்தது அதன் செய்திப் போக்கு.

சாதி, மத வெறிகளைக் குழி தோண்டிப் புதைக்கத் தன்வாழ்வையே ஈடுபடுத்திக் கொண்ட அண்ணல் பெரியார் மதக் கலவரத்தை மூட்ட வந்திருக்கிறார் என்ற தோரணையில் அது வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியின் பலனாகச் சில எதிர் விளைவுகள் ஏற்பட்டன.