பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

47

"சரி நாங்கள் உடனே இரங்கூனுக்குத் திரும்பிப் போவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்."

"அய்யா நகருக்குள் சென்று தான் எல்லா ஏற்பாடும் செய்யவேண்டும்; விமான அலுவலகத்தில் போய்க் கேட்டு ஏற்பாடு செய்யலாம்".

எங்கள் குடிசைப் பகுதியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம், அதில் நீங்கள் வந்து சிறிது நேரம் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும். நிகழ்ச்சி முடிந்தவுடன் உங்கள் பயனத்திற்கு ஏற்பாடு செய்கிறோம்.

மேட்டுக் குடியினர் எல்லாரும் வெறுப்புக்கொண்டு விலகிவிட்ட நிலையில் அந்த எளியமக்கள் அன்புடன்கேட்டுக் கொண்ட நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க பெரியார் அப்போதே ஒப்புக்கொண்டார்.

இவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பர்மியரின் வாடகை ஜீப்பில் எல்லாரும் ஏறிக்கொண்டனர்.

ஜீப் குடிசைப் பகுதியில் வந்து நின்றது.

அந்தப் பகுதியில் இருந்த ஏழைமக்கள் விலகி விலகி நின்ற படி தங்கள் பகுதிக்கு வந்த பெரியாரை வியப்புடன் நோக்கினர்.

நாடு கடந்துவந்த நிலையிலும் ஊரின் ஒதுக்குப் புறத்தில் தனித்தொகுதியாக வாழ்ந்து வந்த மக்களின் வரவேற்பை அன்புடன் ஏற்றுக்கொண்டார்.

சீனாக்காரன் கடையில் வாங்கி வந்த பன்னும் டீயும் தான் அன்று பெரியாருக்கு அவர்கள் கொடுத்த விருந்து,

தாழ்த்தப்பட்ட மக்கள், சமுதாயத்தில் சமநிலைக்கு முன்னேற வேண்டிய தன்மான உணர்வூட்டும் கருத்துக்களை ஒரு மணிநேரம் பேசி அவர்களுக்குப் புத்துணர்வு உண்டாகச் செய்தார்.