பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பர்மாவில் பெரியார்

அந்தத் தோழர்களுக்கு கொள்ளை மகிழ்ச்சி. தந்தை பெரியார், அவர்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து, அவர்களின் விருந்தாளியாக இருந்து அவர்களுக்கு நல்லுரை கூறி வாழ்த்திப் பேசியது பெரும் பேறு என எண்ணினார்கள்.

ஆனால் அவர்களுக்கு ஒரு வருத்தம்.

ஏற்பாடாகியிருந்த பெருமிதமான கூட்டம் நடைபெறாமல் போனதே என்பதுதான்.

மோல்மேனிலே பெரிய அளவிலே திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டம் ஒன்று நடத்தவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

பெரியாருக்கு வரவேற்பளிக்காத அந்த நாளில் அவருடைய இலட்சியத்தை வளர்க்கின்ற இயக்கமாக, பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் மோல்மேன் கிளை வளர்ந்தது. பெரியார் வருகைக்கு முன் பத்துத்தோழர்கள் இரங்கூன் கழகத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள். பெரியார் வந்து சென்றபின் சிறிது சிறிதாக இருநூறு உறுப்பினர்கள் சேர்ந்து மோல்மேன் கிளை உருவாகிவிட்டது.

ஆறு மாதம் கழித்து ஒருவாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு என் மனைவியுடன் சுற்றுலாப் பயணமாகச் சென்றபொழுது மோல்மேன் போயிருந்தேன், என் வருகையை அறிந்துகொண்ட அந்தத் தோழர்கள் உடனே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மோல்மேனில் மையப்பகுதியில் நான்கு சாலைகள் கூடும் இடம் ஒன்றில், திறந்தவெளியில் நடந்த அந்தக் கூட்டத்தில் நான் இரண்டு மணிநேரம் சொற்பொழிவாற்றினேன். பெருந்திரளான கூட்டம்.