பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பர்மாவில் பெரியார்


பெரியாரையும் அவருடைய கருப்புச் சட்டையையும் பார்த்த பர்மியர்கள், அவர் இந்திய நாட்டின் பெளத்த பிட்சு என்றும், இந்திய நாட்டுப் பெளத்த பிட்சுக்கள் காவிக்குப் பதில் கருப்புடை அணிவது வழக்கம் என்றும் எண்ணிக்கொண்டிருந்தார்கள். பெளத்த பிட்சுக்களைப் பர்மிய மொழியில் பொங்கி என்று அழைப்பது வழக்கம். பொங்கிகளுக்குரிய மரியாதை அனைத்தும் உயரிய முறையில் பெரியாருக்கும் அந்த மக்களால் கொடுக்கப்பட்டது.

பெரும்பாலான பர்மிய டாக்சிக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் வண்டியில் ஏறிவிட்டால் உள்ள வாடகையைப் போல் ஐந்தாறு பங்கு வசூலித்து விடுவது வழக்கம்.

பொங்கி என்று அவர்கள் கருதிய பெரியாரிடம், அவர் கொடுத்த காசை (குறைவாக இருந்தால் கூட) வாங்கிக் கொண்டு கும்பிட்டு விட்டுச் செல்வார்கள், ஒருசில வண்டிக்காரர்கள் வாடகை வாங்க மறுத்ததும் உண்டு.

பெரியார் இரங்கூனில் இல்லாத போதிலும், மோல்மேன் சென்றிருந்த அந்த மூன்று நாட்களிலும் மாலை நேரத்தில் நான் தினந்தோறும் மவுந்தாலே வீதிக்குச் செல்வது வழக்கம். அது போலவே, மற்ற செயற்குழு உறுப்பினர்களும் வருவார்கள். எல்லாரும் கூடி அங்குதான் அடுத்துள்ள நிகழ்ச்சிகளை முடிவு செய்வோம்.

மூன்றாவது நாள் மாலை நான் சென்றபோது பெரியார் வந்திருந்தார். மற்ற தோழர்களிடம் கோபம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார்.