பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

51


மோல்மேனில் வரவேற்பு நன்றாக இருந்ததா? என்று கேட்க எண்ணி நான் வாயைத் திறக்குமுன்னே என்மீது பொரிந்து விழுந்தார்.

"என் பேச்சைக் கேட்காமல் - நீயும் கூட வராமல் வற்புறுத்தி அனுப்பிவைத்தாயே, மிக அவமானமாய்ப் போய்விட்டது" என்று ஒரே கோபமாய்ப் பேசினார்.

என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக அத்தனையும் கேட்டுக்கொண்டு கல்லுப்பிள்ளையார் போல் பேசாமல் நின்றேன்.

அவரது கோபம் சிறிது ஆறி, குரல் தணிந்த பிறகு, இராஜாராமும், மணியம்மையாரும் வரவில்லையா என்று கேட்டேன்.

விமானத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் இரயிலில் வருவதாகச் சொன்னார்.

"இரயில் பயணம் மிக மோசமாய் இருக்குமே, பொறுத்திருந்து விமானத்திலேயே வரலாமே" என்றேன்.

"பதினைந்து நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காதென்று சொல்லிவிட்டான். அத்தனை நாட்கள் அந்த ஊரில் எப்படித் தங்கியிருப்பது?"

"அந்த ஆதி திராவிடப் பிள்ளைகள் மட்டும் வராமல் இருந்திருந்தால் எங்கள் நிலை எவ்வளவு மோசமாயிருக்கும்?" என்று பதிலளித்தார் பெரியார்,

"செட்டியார் நண்பர் விமான நிலையத்திற்கு வரவில்லையா?" என்று கேட்டேன்.