பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பர்மாவில் பெரியார்


மார்ட்டபான் நகரிலிருந்து இரயில் புறப்படு முன் முதலில் எஞ்சினும் ரயில் பெட்டி ஒன்றும் அடுத்த ஸ்டேஷன் வரைபோகும். அந்த ரயில் பெட்டியில் அரசுப்படை வீரர்கள் இருப்பார்கள்.

பாதை சரியாக இருந்தால், எஞ்சின் திரும்பி வந்து மற்ற ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்லும், மறுபடியும் அந்த ஸ்டேஷனிலிருந்து அடுத்த ஸ்டேஷனுக்கு எஞ்சினும் முதல் பெட்டியும் போய்வரும். பாதை சரியாக இருந்தால் மறுபடி வந்து மீத வண்டிகளை இழுத்துச் செல்லும். பாதையில் ஏதேனும் பழுதுபடுத்தப்பட்டிருந்தால் அதைச் சரி செய்துவிட்டுப் பயணம் தொடரும். இப்படியாக ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் எஞ்சின் வண்டி இரண்டு முறை வந்துபோகும். மாலை 5 அல்லது 6 மணியளவில் எந்த ஸ்டேஷனை அடைகிறதோ அந்த ஸ்டேஷனில் வண்டி நின்றுவிடும். மேற்கொண்டு மறுநாள் காலை ஆறு மணிக்குத்தான் பயணம் தொடரும்.

பயணிகள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து படுத்துக்கொள்வார்கள். படை வீரர்கள் புகைவண்டி நிலையத்தைப் பாதுகாப்பார்கள். மறுநாள் காலை மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் இடந்தேடி அமர்ந்து கொள்ள, முதலில் எஞ்சின் அடுத்த ஊர்போய் வந்து மீண்டும் இழுத்துச்செல்ல இப்படியே ஆமை வேகத்தில் பயணம் நடைபெறும்.

இடையில் ஓர் ஆற்றுப்பாலம், சப்பானியர் தோற்றோடும் போது அவர்களால் தாக்கப்பட்டு, மீண்டும் கட்டப்படாமலே இருக்கிறது. இந்த ஆற்றங்கரை வந்தவுடன் இரயில் நின்றுவிடும்.