பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

59


இரயிலில் வந்தவர்கள் மூட்டை முடிச்சுகளோடு இறங்கி ஆற்றில் நிற்கும் தெப்பம் ஒன்றில் ஏறி அக்கரை வரவேண்டும். இந்தத் தெப்பம் இரயிலில் வந்தவர்கள் அனைவரையும் கொண்டு சேர்க்க நான்கைந்து முறை வந்து போகும்.

ஒவ்வொரு முறையும் இக்கரையில் உள்ளவர்களை அக்கரைக்கும், அக்கரையில் உள்ளவர்களை இக்கரைக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். அக்கரையில் மக்களை இறக்கிவிட்டு மற்றொரு ரயில்வண்டி புறப்படத் தயாராக இருக்கும்.

அந்த வண்டியில் எல்லாரும் ஏறிக்கொண்டிருக்கும் நேரத்தில் எஞ்சின், இராணுவ வண்டியுடன் அடுத்த ஊர் போய்த்திரும்பும், மீண்டும் இரங்கூன் வரும் வரை, ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் காத்திருந்து பயணம் செய்யவேண்டும்.

மிகப் பொறுமையுள்ள மக்கள் மட்டுமே இந்த இரயில் பயணம் மேற்கொள்ளமுடியும். இப்படிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு முடித்த தோழர் இராசாராமும் மணியம்மையாரும் பொறுமையின் இலக்கணத்தை அறிந்து கொண்டிருப்பார்கள்.

பயணம் எப்படியிருந்ததென்று மணியம்மையாரைக் கேட்டபொழுது, இரங்கூனில் இருந்தவரை, இந்தியாவின் மற்றோர் ஊரில் இருப்பது போன்ற உணர்வுதான் இருந்ததென்றும், இந்தப் பயணத்தின் போதுதான் பர்மிய மக்களின் இடையே முற்றிலும் புதிதான சூழ்நிலையில் இருக்கநேர்ந்ததென்றும் கூறினார்கள்.