பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

பர்மாவில் பெரியார்


இந்தியர்கள் பர்மியர் வீடுகளில் உணவு உண்பதில்லை. கொடுமை என்னவென்றால், பர்மியப் பெண்களைத் தங்கள் மனையாட்டிகளாக வைத்திருக்கும் இந்தியர்களே, அவர்கள் சமைத்தவற்றை உண்பதில்லை. இந்தியர்களின் இப்படிப்பட்ட ஆசாரமுறையே பர்மிய மக்கள் இந்தியர்களை முற்றிலும் வெறுக்கக் காரணமாய் அமைந்துவிட்டது.

மணியம்மையார் இரயில் பணத்தின் போது பர்மியர்கள் செய்து விற்ற தின்பண்டங்கள் பலவற்றை வாங்கிச் சாப்பிட்டதாகவும், அவை சுவையாக இருந்ததாகவும் கூறினார்கள்.

நான் பல பர்மியர் உணவுக் கடைகளில் சென்று உணவுண்டிருக்கிறேன். அவர்கள் நம்மைக் காட்டிலும் துாய்மையாகவும், நல்ல தோற்றமும் சுவையும் உடையனவாகவும் அவற்றைத் தயாரிக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த நான் பர்மியர் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதைக் கண்டு அவர்கள் வியப்படைந்திருக்கிறார்கள்.

இந்திய மக்கள் பர்மிய மக்களோடு ஒட்டுறவு இல்லாமல் வாழும் முறையைப் பெரியார் தம்முடைய சொற்பொழிவுகளில் கண்டித்துப் பேசியிருக்கிறார்; அயல் நாட்டில் வாழும் தமிழர்கள், அந்த நாட்டு மக்களோடு ஒன்றிப்பழகவேண்டுமென்றும், கூடுமான வரை அந்த நாட்டையே தங்கள் தாய்நாடாகப் பாவிக்கவேண்டும் என்றும் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார்.