{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் இந்தநல் அரபு நாட்டின் எழிலுறும் நெற்றி யாக சுந்தரப் பொலிவி னோடு தொல்புகழ் ஆரம் பூண்டு கந்தமார் பகுதி யாகக் கமழ்ந்திடும் எமன்தே யம்மே அந்தநற் றேயம் தன்னில் அமைந்த தாம்சபா வெனுமூர்/ (12) கோட்டைகள் கொத்த ளங்கள் குளிர்மலைச் சோலை வாவி பாட்டைகள் பழத்தோட் டங்கள் பலப்பல சபாவில் உண்டு வாட்டமற் றவ்வூர் மக்கள் வாழ்ந்தனர் நெடுங்கா லம்மாய் ஆட்டமும் பாட்டும் கூத்தும் அதிகமுண் டவ்வூர் தன்னில் (13) இன்றைக்கோ ராண்டு மூவா யிரத்தின் முன்னிந்த வூரை நன்றுறும் நகர நாடாய் நனிபெற தனியாய் ஆக்கி மன்றுசூழ் கொலுவ மைத்து மன்னனாய் சுறாயிக் கென்பான் வென்றிட யாரு மின்றி வீரத்தோ டாண்டி ருந்தான் அரசன் (14) ளமையோ டழகு செல்வம் ஏற்றமா பதவி வீரத் தளபதி படைகள் நல்ல தந்திர அமைச்சர் மற்றும் உளமகிழ்ந் திருக்கச் செய்யும் உயர்பணிப் பெண்கள் ஆண்கள் அளிதரு வாக னங்கள் யானைதேர்க் குதிரை ஓட்டை (15) பொன்னினால் மாளி கைகள் பூவிரி கட்டில் மெத்தை என்னதான் செய்திட் டாலும் எதிர்த்திடா நாட்டு மக்கள் தன்னறி வழிக்கும் தோழர் தனைப்புகழ்ந் திருக்கும் கற்றோர் இன்னவர் சூழ ஆட்சி ஏற்றிருந் தாண்டான் சுறாயிக் (16) எதிர்ப்பவ ரில்லை வேலை எதுவுமே யில்லை தன்னைத் துதித்துயர் வடையும் தோழர் சொற்படி நடக்க லானான் மதிப்புயர் அந்தத் தோழர் மன்னவன் சுறாயிக் தன்னை பொதுப்பட தீய தெல்லாம் புரிந்திடப் பழக்க லானார் (17) மதுவிலே ஆரம் பித்து மங்கையர் சேர்க்கை யீறாய் நிதநிதம் தீய செய்கை நிகழ்த்தியே மகிழ்ந்தான் சுறாயிக்! விதவிதம் அவன்தான் செய்யும் வியத்தகு தீமை தன்னில் பதைப்பினைத் தருவ தாகும் பாவையர்க் கிழைத்த தீங்கு (18)