{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
34 பல்கீஸ் நாச்சியார் காவியம் அன்னம் நாணும் நடையுடையாள் அமுதம் நாணும் முகமுடையாள் துன்னும் சுடர்கள் அத்தனையும் தோற்கும் தமது கண்கொண்டு என்ன நினைத்தோ எனைப்பார்த்தாள் எதையோ கருதி ஏகிவிட்டாள் அன்னாள் வசமாய் ஆகிவிட்டேன் அவளை நினைத்துத் தவிக்கின்றேன் (157) "மலர்காள் மணத்தை வீசாதீர் மதியே ஒளியை உமிழாதே அலர்ந்த மலரில் தேனெடுக்கும் அரிய வண்டின் கூட்டங்காள் பொலியக் கீதம் இசைக்காதீர் போனாள் இருக்கும் இடம்செல்வீர் நலிந்த எனது மனம்மகிழ நாடி அவளை வரச்செய்வீர் (158) குயில்காள் அவளின் இருப்பிடத்தைக் கொஞ்சம் சொல்ல லாகாதா மயில்காள் என்னை அவளிடத்தில் மகிழ அழைத்துச் செல்வீரா புயலை நிகர்த்த கூந்தலுள்ள பெண்ணாள் மாயை மருட்டுதலால் சுயமாய் அவளுக் கொருதீங்கும் செய்யா வெனையேன் வருத்துகிறாள் (159) அவளை யென்பால் வரச்செய்ய ஆகா தென்றால் என்நிலையை பவளம் போன்ற இதழ்கொண்ட பாவை யின்பால் கூறிடுவீர் . "சுவனப் பெண்ணே உனக்காக தோப்பில் காத்தே கிடக்கின்றான் நவமே மிகுந்த எழில்கொண்ட நல்ல இளைஞன் என்றேதான் (160)