பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124
பல்லவர் வரலாறு


பரவி இருந்ததை மெய்ப்பிக்கிறது என்னலாம். விமானத்தைச்சுற்றிலும் வழிவிடப் பட்டுள்ளது. மேலிடம் 45 அடி நீளம், 25 அடி அகலம், 26 அடி உயரம் உள்ளது. அஃது அறச்சாலை அல்லது பொது இடம் போல இருக்கிறது. அதன் தூண்கள் அடியிற் சிங்கங்களை உடையன. இக் கோவில் அமைப்பை, மிகப் பிற்பட்ட காலத்ததான சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தின் அமைப்பிற் காணலாம்.

(3) அர்ச்சுனன் தேர்:- இது தருமராசர் தேரைப் போன்றதே இதுவும் சிவன் கோவில் ஆகும். இது புத்தப்பள்ளி அமைப்பை உடையது. இது 11 சதுர அடி அமைப்புடையது. விமானம் நான்கு நிலைகளை உடையது.

(4) திரெளபதி தேர்:- இது போன்ற கோவில் காணக் கிடைத்தல் அருமை. இது தமிழ்நாட்டில் ஊர்த் தேவதைகட்கு இருக்கும் சிறு கோவில்போல அமைந்துள்ளது. இதன் அடித்தளம் 11 சதுர அடி; உயரம் 18 அடி இதில் உள்ள துர்க்கையின் சிலையில் அமைந்துள்ள வேலைப்பாடு பல்லவர் சிற்ப அறிவை நன்கு விளக்குவதாகும். இங்குள்ள கல்யானை, கற்சிங்கம், நந்தி என்பன காணத் தக்கவை. இக்கோவில் தமிழகத்தின் பண்டைச் சிறு கோவிலை நினைப்பூட்டுவதாகும்.[1]

(5) சகாதேவன் தேர்:- இது பண்டைப் பெளத்தர் தைத்தீயத்தை ஒத்துக் காணப்படுகிறது. இதுபோன்ற பெரியதுர்க்கையின் கோவில் ஒன்று சாளுக்கிய நாட்டில் ‘அய்ஹோனே’ என்னும் இடத்தில் இருக்கின்றது. அதனைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தன் கட்டினான். இங்ஙனம் பல்லவர். சாளுக்கிய வேலையைப் பாராட்டிக் கொண்டாற்போலவே, சாளுக்கியரும் பல்லவர் வேலையைப் பாராட்டிக்கொண்டர் என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகள் காட்டலாம். சகாதேவன் தேர் போன்ற அமைப்புடைய விமானங்கள் பல தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்டன. அவற்றுள் ஒன்று திருத்தணிகையில் உள்ளது.[2]


  1. A.V.T. lyer’s “Indian Architecture’. Bk.II p.225.
  2. Hears’s “Studies in Pallava History’ pp.89-90.