பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
127
நரசிம்மவர்மன்


முதலிய சோழ மன்னர் காலத்தில் சிறந்த கடற்றுரைப் பட்டினமாக இருந்தது என்பதைப் பத்துப் பாட்டால் அறியலாம்.

கோட்டைகள் கட்டிய கொற்றவன்

நரசிம்மவர்மன் காஞ்சிபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான் என்பர் சிலர். ஆனால், அக்கோட்டை இவன் தந்தை காலத்திலே இருந்தது என்பது சாளுக்கியர் பட்டயத்தால் வெளியாவதால், இவன் அப்பழைய கோட்டையைப் புதுப்பித்தான் என்று கோடலே பொருத்தமுடையது. திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த லால்குடியை அடுத்துப் பெருவள நல்லூர் இருக்கின்றது. அதற்கு அண்மையில் பல்லவரம் (பல்லவபுரம்) என்னும் சிற்றுர் உள்ளது. அதனில் நரசிம்மவர்மன் காலத்துக் கோட்டை ஒன்று பாறைமீது அமைந்து இருந்தது. அக் கோட்டை முழுவதும் அழிந்துவிட்டது. ஆயினும் அதன் அடிப்படையை இன்றும் காணலாம். அங்குப் பல்லவர் காலத்துப் பெரிய செங்கற்கள் இன்னும் கிடைக்கின்றன. அவ்வூருக்கு அருகில் பல்லவர்க்கும் சாளுக்கியவர்க்கும், பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர்கள் நடந்துள்ளன. ஆதலின், அப் பல்லவபுரம் பழைய காலத்தில் பல்லவர் ஆண்ட சோழ நாட்டின் தலைநகரமாக இருந்தது போலும்! அப் பல்லவபுரப் பாறைமீது ஒரு கல்வெட்டு அழிந்து கிடக்கிறது.[1]

பட்டப் பெயர்கள்

நரசிம்மவர்மன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். அவற்றுட் சில ‘மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,’ என்பன.

அக்கால அரசர்

(1) சாளுக்கியர்: விந்தமலைக்குத் தென்பாற்பட்ட இடத்தில் இரண்டு பேரரசுகளே நிலைபெற்று இருந்தன. ஒன்று சாளுக்கியர்


  1. P.T.S. Iyengar’s Pallavas, Part II pp.43-44.