(2) நரசிம்மவர்மன் காலத்துப் பஞ்சம் கல்வெட்டுச் சான்றுகள் பெற்றிலது. முதலாம் பரமேசுவர வர்மனுக்கும் சாளுக்கிய விக்கிரமாதித்தற்கும் (கி.பி. 665-680) நடந்த கொடிய போர் முன்பே விளக்கப்பட்டதன்றோ? அப்போரில் பாண்டியர், சோழர் முதல் பலரும் தொடர்புற்றனர். இங்ஙனம் நடைபெற்ற பெரும் போரினால் மூல பண்டாரம் வற்றக்கேட்பானேன்? நாடு வறுமை கொள்ள இதைவிடச் சிறந்த காரணம் வேறென்ன வேண்டும்? இதுகாறும் கூறப்பட்ட பெரும் போர்களின் விளைவாலும், இராசசிம்மன் காலத்தில் கொடிய வறுமை உண்டானது. இதனை அவன் காலத்து அவைப்புலவரான தண்டி என்பார் பின்வருமாறு கூறியுள்ளார் அது, “சோழ பாண்டிய நாடுகள் பகைவன் கொடுமையால் வெந்துயர் உற்றன; மங்கையர் சீரழிக்கப் பட்டனர்; வேள்விகள் குன்றின, களஞ்சியங்கள் காலியாயின. மதிப்புக் கெட்டது. தோட்டங்களும் மரங்களும் அழிக்கப்பட்டன; பலர் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர்; வேள்விச் சாலைகள் அழிக்கப்பட்டன... செல்வர் கொல்லப்பட்டன. சாலைகள் பழுதுபட்டுக் கிடந்தன; பல்லவ நாட்டில் தண்டியின் உற்றார் உறவினர் மாண்டொழிந்தனர்; தண்டி உணவின்றி நாடு முழுவதும் சுற்றி அலைந்தார்; பல்லவப் பேரரசு தத்தளித்தது: காஞ்சிநகரம் கை விடப்பட்டது; அவைப் புலவரும் கற்றாரும் நாடு முழுவதும் அலைந்து திரிந்தனர்,” என்பது.[1]
- ↑ இதனைப் பாண்டிய நாட்டுப் பஞ்சவருனனையொடு (களவியலிற் கூறப்படுவது) ஒப்பிட்டுக் காண்க.களவியல் உரையின்கூற்றுப் பொய் என்று கூறினோர் பலராவர். ‘பொய்’ எனப்பட்டதெல்லாம் வரலாற்றால் ‘உண்மை’ ஆகுதல் கருதற்பாலது. இத்தகைய பஞ்சம் ஒன்று காஞ்சியில் உண்டானதென்று மணிமேகலை கூறல் காண்க. ‘மணிமேகலை அங்குச் சென்று பெருஞ்சோறு வழங்கினாள்’ என்பதும் மணிமேகலை குறிக்கிறது. அப் பஞ்சம் அக்காலத்தில் உண்டானதேன் இளங்கிள்ளி சோழ, பாண்டியரோடு காரியாற்றில் நடத்திய பெரும்போரே காரணமாகும் என்பது இங்கு உணரற்பாலது.