பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
259
மூன்று ஐயங்கள்


நன்கறியலாம். காஞ்சி, மணிமேகலை காலத்திற் சிறந்த பெளத்த நகரமாக இருந்ததை இலக்கியம் கொண்டறியலாம். மத்த விலாசம், இயூன் - சங் குறிப்பு இவை கொண்டு கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பெளத்த விகாரங்கள் காஞ்சியில் இருந்தன என்பதை அறியலாம். கி.பி. 7 ஆம் நூற்றாண்டினரான சம்பந்தர் தஞ்சைக் கோட்டத்தில் உள்ள போதி மங்கை (இக்காலப் ‘பூத மங்கலம்') என்னும் ஊரில் இருந்த புத்தருடன் வாதிட்டு வென்றார் என்னும் குறிப்பால், தஞ்சைக் கோட்டத்தில் பெளத்தர் இருந்தமை அறியலாம். திருமங்கை ஆழ்வார் நாகையில் இருந்த பெளத்தவிகாரத்துப் பொன் விக்கிரகம் ஒன்றைக்கவர்ந்து வந்தனர் என்று குருபரம்பரை கூறலால், இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் நாகையில் பெளத்தர் இருந்தனர் என்பது தெளிவு. இவ் விடங்களில் எல்லாம் பெளத்தர் தம் சமயக் கல்வியைத் தம்மைத் தேடி வந்த மக்கட்கு ஊட்டி வந்தனர் என்பது மிகையாகாது.

சமணர் கலை இடங்கள்

பாதிரிப்புலியூர்-மடம்

பல்லவர் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவில் சிறந்த சமண மடம் பாதிரிப்புலியூரிற்றான் (பாடலிபுத்ரம்) இருந்தது. ‘லோக விபாகம்’ என்னும் சமண நூல் பாலி மொழியிலிருந்து வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இடம் பாதிரிப்புலியூரே ஆகும் அன்றோ? கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அந்த மடத்தில் புகழ்பெற்ற சிம்மசூரி, சர்வநந்தி என்னும் திகம்பர சமணப் பேரறிஞர் வடமொழியிலும் பிராக்ருதத்திலும் புலவராய் விளங்கினர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மருள் நீக்கியார் (அப்பர்) அம் மடத்திற் சேர்ந்து, சமணர் நூல்களைக் கற்றுப்புத்தரைவாதில் வென்று, மடத்துத் தலைவராகித்தருமசேனர் என்னும் பட்டமும் பெற்றுத் திகழ்ந்தார்.[1] இங்ஙனம் இம் மடம் பெரிய கலைப்பீடமாக இருந்தமையாற்றான். இடைக்காலப்


  1. அப்பர் புராணம், செ.37-40