பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

பல்லவர் வரலாறு



சிவபெருமான் திருக்கூத்து

சிவபெருமான்திருக்கூத்துவகைகள் பல்லவர்க்குமுற்பட்டவை. பல்லவர்க்கு முற்பட்ட மணிவாசகர் தமது உளமுருக்கும் திருவாசகத்திற் பல இடங்களில் இவற்றைக் கூறிக் களிக்கின்றார். மகேந்திரவர்மன் தனது மத்தவிலாசத்தில், “சிவன் காபாலி. அவனது தாண்டவ நடனம் மூவுலகங்களையும் ஒருமைப்படுத்துகின்றது.” என்று கூறியுள்ளான். இந்தத் தாண்டவ நடனம் சிவனார் ஆடிய நடனங்களில் இரண்டாவதாகும். இஃத அப் பெருமானது பைரவர் அல்லது வீரபத்திரர் நிலையை உணர்த்துவதாகும். இந்நடனம் சுடுகாட்டில் பேய்க் கணங்கன் புடை சூழ இறைவன் பத்துக் கைகளுடன் ஆடுவதாகும்.[1] இத்தகைய சிற்பங்களை எல்லோரா, எலிபென்டா புவனேஸ்வரம் முதலிய இடங்களில் தெளிவுறக் காணலாம். இந்தத் தாண்டவ நடனம் ஆரியர்க்கு முற்பட்ட நடனக் கலையைச் சேர்ந்தது. ‘பாதி இறை-பாதி பேய்க்கண்ம்’ அமைப்புக் கொண்ட ஒரு தெய்வ நடனத்தைச் சேர்ந்தது. இக்கூத்து பிற்காலத்தில் சிவபெருமானுக்கும் அம்மைக்கும் உரியதாகச்சைவசாக்த இலக்கியங்கள் மிக்க அழகாக விளக்கலாயின.[2]

கயிலாசநாதர் கோவில்

சிறந்த சிவபக்தனான இராசசிம்மன், தான் அமைத்த கயிலாசநாதர் கோவிலில் சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்களைத் தமிழ்மக்கள் அறியும் வகையில் சிற்பவடிவில் அமைத்துள்ளான். அவை உள்ளத்தையும் உயிரையும் ஈர்ப்பனவாகும். அவற்றுள் நாதாந்த நடனமும் குஞ்சித நடன்மும் குறிக்கத்தக்கன.


  1. ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே’
    ‘கூரிருட்கூத்தொடு குளிப்போன் வாழ்க!’
    ‘கழுதொடு காட்டை நாடகம் ஆடி......’
    ‘குடர்நெடு மாலை சுற்றி....’
    ‘சுடுகாட்டு அரசே......’ (திருவாசகம்)
    ‘ஆடினார் பெருங்கூத்துக் காளிகாண் (அப்பர் தேவாரம்)’
  2. A.K.Kumarasaml, “Siddhanta - Dipika’ Vol.XIII (1912).