பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

281



கோவிலில் மட்டும் 42 அடிகள்மார் இருந்தனர் எனின், பல்லவப் பெருவேந்தர் நடனக் கலையை வளர்த்த சிறப்பை என்னெனப் பகர்வோம் திருவொற்றியூர்க் கோவிலிலும் குடந்தை முதலிய பல இடங்களிலும் அடிகள்மார் பலர் இருந்தனர்.

“தேனார் மொழியார் திளைத்தங் காடித் திகழும் குடமூக்கில்” (72, 7)
“வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே” (130,1),
“முழவம் மொந்தை குழல்யாழ் ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர்
ஏரார் பூங்காஞ்சி”
“தண்டு உடுக்கை தாளம் தக்கை சார
நடம் பயில்பவர் உறையும் புகார்”

என வரும் திருஞானசம்பந்தருடைய திருப்பாடல் அடிகளால் - அக்காலத்தில் (கி.பி. 7ஆம் நூற்றாண்டில்) அடிகள் மார் பெருங்கோவில்களில் எல்லாம் இருந்து இசையையும் நடனத்தையும் வளர்த்து வந்தனர் என்பதை நன்கறியலாம், இசை, நடனம் முதலியவற்றில் பல்லவர்கல்வெட்டுக் குறிப்புகட்குத் தேவாரம், விளக்கமாக அமைந்துள்ள பெற்றி அறிஞர் கவனிக்கத்தக்கதாகும். தேவாரப் பதிகங்கள் பக்திச் சுவையினூடே வரலாற்றுக் குறிப்புகளையும் வாரி வழங்கும் பண்புடையன என்பதைத் தமிழ்மக்கள் அறியும் நாளே, இத் திருமுறைகள் பொன்னேபோற் போற்றப்படும் பொன்னாள் ஆகும்.