பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
பல்லவர் வரலாறு


படித்துணர்ந்து, ‘அவை பல்லவர் தம் கல்வெட்டுகளே’ என்பதை மெய்ப்பித்தார். பின்னர் ஜேம்ஸ்பெர்கூசன் என்பவர் மகாபலிபுரத்தைப் பார்வையிட்டு, ‘அங்குள்ள வேலைப்பாடுகள் கி.பி. 6,7 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை’ என்று முடிவு கட்டினார். பிறகு, சென்ற நூற்றாண்டின் இறுதியிற்றான் பல்லவரைப் பற்றிய மேற்சொன்ன செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும் வெளிப்போந்தன. அவற்றைக்கண்ட ஆராய்ச்சியாளர் திகைப்பும் வியப்பும் கொண்டனர்; பல ஆண்டுகள் அவற்றை ஆய்ந்து வெளியிட்டனர்; இம் முயற்சியில் முதல் இடம் பெற்றவர் டாக்டர் ப்ளீட் (Dr. Fleet) என்பவரே. இவரது முயற்சிக்குப் பின்னர்ப் பல கல்வெட்டுகளும் மகாபலிபுரம் ஒழிந்த பிற (பல்லவர் கோயில்கள் கொண்ட) இடங்களும் ஆராய்ந்து அறியப்பட்டன. பட்டயங்களும் கல்வெட்டுகளும் பேரறிஞர் பலரால்[1] பார்வையிடப்பெற்று விளக்கக் குறிப்புகளுடன் அச்சேறி வெளிப்போந்தன. இவற்றின் பின் கிடைத்த புதிய பட்டயங்களும் கல்வெட்டுகளும் ஆண்டுதோறும் ஆராய்ச்சியாளர் வெளியிடும் தென் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கையில் வெளியாகி உள்ளன. இவையன்றி, இன்னும் எண்ணத் தொலையாத பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் இருத்தல் கூடும். அவை நாளடைவில் வெளிவரும். அவை வரவரப் பல்லவர் வரலாறு மேலும் விளக்கம் பெறும் என்பதில் ஐயமில்லை.

நூலாசிரியர் பலர்

டாக்டர் ப்ளீட் துரை[2]க்குப்பின்னர் வெங்கையா என்பவர் 1907இல் பல்லவர் வரலாற்றை ஓரளவு தமிழ் நூல் உணர்ச்சியுடன் திறம்பட ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.[3] 1917இல் பிரெஞ்சுப்


  1. Dr. Fleet Hutzsch, Venkayya, Keilhorn, Krishna Sastry and others. They can be found in the Indian Antiquary, Soultes Indian Inscriptions and the Epigraphia Indica.
  2. Vide his “Dynastiesofthe Kanarese Districts'in the Bombay Gazetteer
  3. Archaeological Annual Survey Report for 1906-7, pp. 217-243.