பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக்காலப் பல்லவர்

67



தவறில்லை. ஏனெனின், ஏறத்தாழக் கி.பி.350இல் கதம்ப அரசை வனவாசியில் தோற்றுவித்த மயூரசன்மன் பல்லவரிடமிருந்தே சூட்டுநாகர் ஆண்ட நாட்டைப் பெற்றான் என்று கதம்பர் பட்டயம் கூறுதலால் என்க. சிவஸ்கந்தர்வர்மன் (கி.பி. 300-325) வெளியிட்ட மயிதவோலு, ஹிரஹதகல்லிப் பட்டயமொழிக்கும் கதம்பர் முதலில் வெளியிட்ட மாலவல்லிப் பட்டய மொழிக்கும் சிறிதளவே வேறுபாடு. கதம்பரது பட்டயம் பிற்காலத்தது என்பது, உணரக்கிடத் தலால், சிவஸ்கந்தர்வர்மனுக்குப் பிறகு அண்மையிலேயே கதம்பர் அரசு தோன்றியிருத்தல் வேண்டும். வீரவர்மனுக்குப் பின்வந்த இரண்டாம் கந்தவர்மன் வாகாடரிடமிருந்து முன்சொன்ன கடிகாசலமும் அதனைச்சுற்றி இருந்த நிலப்பகுதியையும் கைப் பற்றினான் என்பது பொருத்தமாகக் காணப்படுகிறது.[1]

பல்லவர் - கதம்பர் போர்கள்

(1) ஏறக்குறையக் கி.பி. 350 இல் மயூர சர்மன் பல்லவரைத் துன்புறுத்திச் சமாதானத்திற்கு வரச்செய்து, அவரிடம் குந்தளநாட்டை மேற்பார்க்கும் உரிமை பெற்றான். அவனுக்குப்பின் வந்த கங்க வர்மன், பாகீரத வர்மன், காகுத்த வர்மன் ஆகிய இவர்கட்கு அரசர்க்குரிய பட்டயங்கள் இல்லா திருத்தலை நோக்க - இவர்க்குப் பின் வந்த சாந்தி வர்மன், மிருகேச வர்மன் முதலியோர்க்குத் தரும மகாராசர் முதலிய பட்டங்கள் இருத்தலைக் காண, முன் சொல்லப்பட்டவர் பல்லவர்க்கு அடங்கிய சாமந்தராக இருந்து குந்தள நாட்டைப் பாதுகாத்து வந்தனர் எனக் கொள்ளலாம்.[2]


  1. இது மேலும் ஆராய்ச்சிக்கு உரிய பகுதியாகும். ‘சமுத்திர குப்தன் படையெடுப்புக்குப்பின் காஞ்சி நகரம் சோழர் கையிலிருந்தது. அவரிடமிருந்தே குமார விஷ்ணு மீட்டான்’ என எழுதிய ஆராய்ச்சியாளர் பலர். அவர் கூற்றுப் பொருந்தாது என மறுத்தார் பலர். & Vide R. Gopalan’s “Pallavas of Kanchi.’ pp.63, 65.
  2. M.V. Krishna Rao’s “Ganges of Talakad’ p.27: ‘கங்கவர்மன் அஞ்சத்தக்க போர்கள் புரிந்தவன். பாகீரத வர்மன் பேரரசனாக இருந்தான் சந்திரகுப்தன் காளிதாசனைத் தூது அனுப்பி இவனிடம் பெண் கொள்ள முயன்றான் எனின், இவன் சிறப்பை என்னென்பது & Morae’s Kadamba Kula pp.18-23.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/87&oldid=583612" இலிருந்து மீள்விக்கப்பட்டது