பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'தேன்தேர் சுவைய திரளமை மாத்துக்
கோடைக் கூழ்த்த கமழ் நறுந் தீங்கனி
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச்சுளை யளைஇ
இறாலொடு கலந்த வண்டு மூக அரியல்
நெடுகண் ஆடமைப் பழுநிக் கடுந்திறல்
பாப்புக்கடுப் பன்ன தோப்பிவான் கோட்டுக்
கடவுளோங்கு வரைக் கோக்கிக் குறவர்
முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி.'

(அகம், 348:2-9)

ரோமாபுரியிலிருந்து வாணிகத்துக்காக வந்த யவனர் மதுபானத்தையும் கொண்டு வந்தார்கள். அது திராட்சைப் பழச் சாற்றினால் செய்யப்பட்ட கொடிமுந்திரிச் சாறு (Wine). அது விலையதிகமாகையால் அரசர் மட்டும் வாங்கியருந்தினார்கள். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனை நக்கீரர் வாழ்த்தினபோது, யவனர் தந்த தேறலை உண்டு மகிழ்ந்திருப்பாயாக என்று வாழ்த்தினார்.

'யவனர்
நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறத்து
ஆங்கினிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற.'

(புறம், 56)

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் வாழ்த்திய போதும் ' மணங் கமழ் தேறலை' உண்டு மகிழ்ந்திருப்பாயாக என்று வாழ்த்தினார்.

'இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்தினிது உறைமதி பெரும'

(மதுரை. 779-81)

மாங்குடி மருதனார் இன்னொரு செய்யுளிலும் அப்பாண்டியனை அவ்வாறே வாழ்த்தினார்.

108