பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'தந்நாட்டு விளைந்த வெண்ணல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
....................................................................
உமணர் போகலும்'

(நற்றிணை , 183)

(தந்நாடு -உப்பு வாணிகரின் மருதநிலம்; பிற நாடு உப்பு விளையும் நெய்தல் நிலம்: உமணர்-உப்பு வாணிகர்)

நெய்தல் நிலத்து முதுமகள் ஒருத்தி தன் உப்பளத்தில் விளைந்த உப்பை மாற்றி நெல் சொண்டுவரச் சென்றாள் என்று கல்லாடனார் கூறுகிறார். 'ஆயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்?' (குறும். 269: 4-6)
(ஆய்-அன்னை, தாய்; தரீஇய-கொண்டுவர )

ஊர்த் தெருவுகளில் உப்பு விற்ற உமணப் பெண் உப்பை நெல்லுக்கு மாற்றினதை அம்மூவனார் கூறுகிறார் .

'கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் தேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலை மாறு கூறலின்.'

(அகம், 140: 5-8)

(சேரி-தெரு; விலைமாறு-பண்ட மாற்று)

'நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்
கொள்ளிரோ வெனச் சேரிதொறும் நுவலும்'

(அகம், 390: 3-9)

உப்பை நெல்லுக்கு மாற்றிய உப்பு வாணிகர் தமக்குக் கிடைத்த நெல்லைச் சிறு படகுகளில் ஏற்றிக்கொண்டு கழிகளில் ஓட்டிச் சென்றதை கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார்.

'குறும் பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி'

15