பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்'

(சிலம்பு, 6:43)

'மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்.'

(பட்டினப்பாலை, 216-218)

அரபு வாணிகர்

தமிழ் நாட்டுக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகர் சேர நாட்டின் முசிறித் துறைமுகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். முசிறியில் அவர்கள் வாணிகஞ் செய்த இடத்துக்குப் பந்தர் என்று பெயரிட்டிருந்தார்கள். பந்தர் என்றால் அரபு பொழியில் கடை வீதி என்பது பொருள். முசிறித் துறைமுகத்துப் பந்தரில் முத்துக்களும் விலையுயர்ந்த நகைகளும் விற்கப்பட்டன. பதிற்றுப்பத்து 6 ஆம் பத்தில் (செய்யுள் 5) நன்கல வெறுக்கைத் துஞ்சும் பந்தர் என்றும் , 7 ஆம் பத்து 7 ஆம் செய்யுளில் , பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் என்றும், 8 ஆம் பாத்து 4 ஆம் செய்யு வில், பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம் என்றும் பத்தர் அங்காடி கூறப்படுகிறது. அரபியர் தமிழ் நாட்டோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்தபடியால் அரிசி என்னுந் தமிழ்ச் சொல் அரபு மொழியில் சென்று ஒருஜ் என்று வழங்குகிறது. அராபியர், அக்காலத்தில் தமிழ் நாடாக இருந்த சேர நாட்டிலிருந்து மூங்கிலைக் கொண்டுபோய் அரபி நாட்டில் வளர்த்தார்கள். அராபியர், தமிழ் நாட்டுப் பொருள்களை, முக்கியமாகச் சேர நாட்டு மிளகைக் கொண்டு போய்ச் செங்கடல் துறைமுகங்களிலும் எகிப்து நாட்டில் நீல நதி, கடலில் கலக்கும் இடத்திலிருந்த அலக்சாந்திரியத் துறைமுகப் பட்டினத்திலும் விற்றார்கள், அங்கிருந்த பொருள்களைக் கொண்டுவந்து தமிழ் நாட்டில் விற்றார்கள். அக்காலத்தில் அராபியர் கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று வாணிகம் செய்யவில்லை. தமிழர் கிழக்கித்தியத் தீவுகளுக்குப் போய் அங்கிருந்து கொண்டு வந்த பொருள்களை இங்கிருந்து

50