பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யவன வாணிகர் பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும் கொடுத்துத் தமிழ் நாட்டுப் பண்டங்களை வாங்கிக் கொண்டு போனார்கள். யவனக் காசுகள் தமிழ் நாட்டிலே பல இடங்களில் கிடைக்கின்றன. அந்தப் பழங்காசுகள் தற்செயலாகப் பூமியிலிருந்து அண்மைக் காலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

பழைய தமிழ் நாடான சேர நாட்டிலே திருவனந்தபுரத்துக்கு வடக்கே 150 மைல் தூரத்தில் உள்ள பூஞ்சாரிலும் திருச்சூருக்கு வடமேற்கே 22 மைல் தூரத்திலுள்ள எய்யலிலும் 1945 -ஆம் ஆண்டில் உரோம தேசத்துப் பழம் காசுகள் கிடைத்தன. கொங்கு நாட்டில் கரூர், காட்டன்கன்னி, குளத்துப்பாளையம், பென்னார், பொள்ளாச்சி, வெள்ளலூர் முதலான இடங்களிலும் பாண்டி நாட்டில் மதுரை, கலியம்புத்தூர், கரிவலம் வந்த நல்லூரிலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கருக்காக் குறிச்சியிலும் , தஞ்சாவூர், மகாபலிபுரம் முதலான ஊர்களிலும் யவன நாணயங்கள் (உ.ரோமாபுரிப் பழங்காசுகள்) கிடைத்துள்ளன. இக்காசுகள். அக்காலத்தில் நடந்த தமிழ் யவன வாணிகத்துக்குச் சான்றாக இருக்கின்றன.

சாவகம்

தமிழகத்துக்குக் கிழக்கே நெடுந்தூரத்தில் ஆயிரம் மைலுக்கப்பால் கிழக்கிந்தியத் தீவுகள் உள்ளன. அந்தத் தீவுக் கூட்டத்தில் மிகப் பெரியவையும் சிறியவையும் மிக நுண்மையுமான தீவுகள் ஆயிரத்துக்கு மேற்பட்டவையுள்ளன. சங்க காலத் தமிழர் அக்காலத்தில் அந்தத் தீவுகளுக்குக் கடல் கடந்துபோய் வாணிகஞ் செய்தார்கள், அவர்கள் அந்தத் தீவுகளுக்குச் சாவக நாடு என்று பெயரிட்டிருந்தார்கள், மணிமேகலை காவியம் சாவக நாட்டைக் கூறுகிறது. அந்தத் தீவுகளிலே சில தீவுகளில் மட்டும் நாகரிகம் அடைந்த மக்கள் அக்காலத்தில் இருந்தனர். பெரும்பான்மையான தீவுகளில் இருந்தவர் அக்காலத்தில் நாகரிகம் பெறாதவர்களாக இருந்தார்கள், நாகரிகம் பெற்றிருந்த தீவுகளில் முக்கியமானது சாவகத் தீவு. இந்தத்

57