பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழ நாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் அக்காலத் தமிழ் வாணிகர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்தது போலவே , சாவகத் தீவிலிருந்த சாவக வாணிகரும் தமிழ் நாட்டுக்கு வந்து வாணிகம் செய்தனர் என்பதில் ஐயமில்லை. பல நாட்டுக் கப்பல் வாணிகர், அக்காலத்தில் உலகப் புகழ் பெற்றிருந்த காவிரிப்பூம் பட்டினத்திலே வந்து தங்கியிருந்ததைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. (பட்டினப்பாலை, 21-218, சிலப்பதிகாரம், இந்திரவிழா, 9-12, கடலாடுகாதை, 130-131) அங்கு வந்திருந்த அயல் நாட்டு வாணிகரில் சாவகத் தீவிலிருந்து வந்தவர்களும் இருந்தனர் என்று கருதலாம்.

அக்காலத்தில் சாவகத் தீவின் வாணிகர் கப்பல்களிலும் குறும் படகுகளிலும் பல கடல்களைக் கடந்து சென்றார்கள், பசிபிக் மகாசமுத்திரத்தில் வாழ்ந்த அவர்கள் வங்காளக் குடாக்கடலைக் கடந்து தமிழ்நாட்டுத் துறை முகங்களுக்கு வந்தனர். பிறகு குமரிக்கடலைக் கடந்து ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கே கடல் நடுவிலிருந்த மடகாஸ்கர் தீவுக்கும் சென்றார்கள்', மடகாஸ்கர் தீவு அக்காலத்தில் மனிதர் இல்லாத வெறுந்தீவாக இருந்தது. அந்தத் தீவில் சாவகத்து வாணிகக் கப்பலில் வந்து தங்கித் தங்கள் நாட்டுப் பொருள்களை விற்றார்கள். அத்தீவுக்கு மேற்கிலிருந்து ஆப்பிரிக்க மக்களும், வடக்கே இருந்து அரபியர்களும் வந்து அவர்களுடைய பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள். இவ்வாறு மடகாஸ்கர் தீவை மையமாகக் கொண்டு சாவக வாணிகர் வாணிகஞ் செய்தார்கள். அவர்களில் பலர் அந்தத் தீவிலேயே நிலையாகத் தங்கி விட்டனர். பிற்காலத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குக் கரையிலிருந்து ஆப்பிரிக்க மக்களும் மடகாஸ்கர் தீவுக்கு வந்து அத்தீவின் வடக்கில் குடியேறினார்கள். அவர்கள் சாவகர் பேசின மடகாசி மொழியையே பேசக் கற்றுக் கொண்டு அந்த மொழியையே பேசினார்கள், இப்போதும் மடகாஸ்கர் தீவில் பேசப்படுகிற மொழி மலகாசி மொழியே. மடகாஸ்கர் நீவு இப்போது மலகாசிக் குடியரசு நாடு என்று பெயர் பெற்றிருக்கின்றது.

61