பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசர் பரம்பரையரசாண்டு வந்தது. துளு நாட்டின் முக்கியத் துறைமுகமாக இருந்தது மங்களூர், நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் மங்களூர் இருந்தது. இப்போதும் மங்களூர் சிறு துறைமுகப் பட்டினமாக இருக்கிறது. மங்களூரில் இருந்த மங்கலாதேவி கோயில் பேர்போனது. சிலப்பதிகாரம் மங்கலாதேவி கோயிலைக் கூறுகின்றது.

மங்களூர் துறைமுகத்தில் யவன வாணிகர் வந்து வாணிகம் செய்தார்கள். தாலமி என்னும் யவனர் இந்தத் துறைமுகப்பட்டினத்தை மகனூர் என்று கூறியுள்ளார். மங்களூரைத்தான் இவர் இப்படிக் கூறியுள்ளார். பிளைனி என்னும் யவனர் இதை 'நைத்ரியஸ்' (Nitrias) என்று கூறியுள்ளார். நைத்ரியஸ் என்பது நேத்திராவதியாறு. நேத்திராவதி ஆற்று முகத்துவாரத்தில் இருக்கிறபடியால் இதை நைத்ரியஸ் என்று கூறினார் போலும். மேலும், இவர் இந்த இடத்தில் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்றும் கூறுகின்றார். மங்களூருக்கு மேற்கே கடலில் ஒரு சிறு தீவில் குறும்பர்கள் இருந்தனர். அவர்கள் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வளர்த்திருந்தார்கள். அவர்கள் வாணிகத்துக்காக வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தனர். அதனால் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு யவனக் கப்பல்கள் வருவது தடைப்பட்டன. அப்போது, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் தன் இளைய மகனான செங்குட்டுவன் தலைமையில் கடற் படையையனுப்பிக் கடற்கொள்ளைக் குறும்பரையடக்கினான். இச்செய்திகளைப் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, ஐந்தாம் பத்துகளால் அறிகின்றோம்.

நறவு

துளு நாட்டிலே மங்களூர்த் துறைமுகத்துக்குத் தெற்கே நறவு என்னும் துறைமுகப் பட்டினம் இருந்தது. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்தது. துளுநாட்டு நன்னன் ஆட்சியில் இது இருந்தது. நறவு என்னும் சொல்லுக்கு கள், மது என்னும் பொருளும் உண்டு. ஆகையால் நறவு

90