பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


நகரின் வீதிகள் செல்வ வளம் மிக்கவையாயிருந்தன.

அங்கே குதிரைகள் பல கட்டப்பட்டிருந்தன. விரைவாக நிமிர்ந்து ஓடக்கூடியவையான அக்குதிரைகள் கடல்வழியாக வந்தவை. தரைமார்க்கமாக வண்டிகளிலே ஏற்றிக்கொண்டு வந்து குவித்த மிளகு மூட்டைகள் ஒரு புறம் நிரம்பிக்கிடந்தன. பல திறப்பட்ட இரத்தினங்களும், பொன் கட்டிகளும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன அவை இமயமலை போன்ற வடநாட்டு மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை,

குடகுமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்தனக் கட்டைகளும், அகிற்கட்டைகளும் குவிக்கப்பட்டிருந்தன.

பாண்டி நாட்டுத் தென்கடலிலே மூழ்கி எடுத்த சிறந்த முத்துக் குவியல்கள் காணப்பட்டன. கீழைக்கடலில் பிறந்த பவளங்களும் காணப்பட்டன.

கங்கை நதி பாயும் பகுதிகளிலிருந்து வந்த விளைபொருள்களும், காவிரி பாயும் பகுதியிலிருந்து கொணரப்பட்ட விளைபொருள்களும் குவிந்துகிடந்தன.

இலங்கைத் தீவிலே உண்டான உணவுப்பொருள்கள் ஏராளமாக வந்து குவிந்திருந்தன. காழகத் தீவு என்று பெயர் பெற்றிருந்த பர்மாவிலிருந்து பல பொருட்கள் வந்து,நிரம்பியிருந்தன.

இவ்வாறு செல்வம் மல்கி விளங்கின காவிரிப்பூம்பட்டினத்து வீதிகள் என்கிறார் பட்டினப்பாலை ஆசிரியர்.85

இங்கு கூறிய சான்றுகளால் காவிரிப்பூம்பட்டினம் கடற்கரைத் துறைமுக நகரமாகவும் அறிஞர், செல்வர் நிறைந்த நகரமாகவும் விளங்கிய சிறப்பை அறிகிறோம்.