பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

191



தென் கரையை அடைந்து மதுரைக்குச் சென்றனர்.27 என வருவதாலும் வையை நீர்ப் பரப்பெல்லாம் பூக்கள் நிரம்பிப் புனல்யாறு அன்று இது பூம்புனல்யாறு28 என்று வருவதாலும் நகரின் வளமான அமைப்புக்கு, வையை துணையாயிருந்ததை அறியலாம்.

அக்கால மதுரை நகர மக்கள் வையையைக் கடக்கப் பரிமுக அம்பி, கரிமுக அம்பி, மரப்புணை போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.29 வையை நதியில் திருமருத முன்துறை என்ற துறை புகழ் பெற்றதாயிருந்துள்ளது.30

கோவலனும், கண்ணகியும், கவுந்தியடிகளும் மதுரை நகரின் புறஞ்சேரிக்குச் சென்றதைக் கூறும் சிலப்பதிகார ஆசிரியர்,

அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்
... ... ... ...
... ... ... ...
... ... ... ...
... ... ... ...
... ... ... ...
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக் கைகாட்டப்
புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீ ரேரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
வேய்ந்திரட் பந்தரும் விளங்கிய விருக்கை
அறம்புரி மாந்த ரன் றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்31

என்கிறார். புறஞ்சேரிப் பகுதியில்-காவற்காட்டின் மரங்களடர்ந்த நிலையும், பொழில் வளமும், அகழியின் அமைப்பும், கொடிகள் பறக்கும் மதிலின் நெடுமையும் இப்பகுதியால் தெரியக் கிடைக்கின்றன.32