பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



லைக்குக் காட்டுகிறான்.8 பெரும்பாணாற்றுப்படையில் காஞ்சியின் நகரப் பகுதியாகிய திருவெஃகா கூறப்படுகிறது.9 'வெயில் நுழைதலறியாத குயில் நுழையும் சோலை’ எனக் காஞ்சி நகரச் சோலை கூறப்படுகிறது.10 தேர்கள் தடம் பதித்து ஓடிய காஞ்சிநகர வீதிகள் கூறப்படுகின்றன.11 செங்கலாற் செய்த உயரமான புறப்படை வீடு12, மிளை சூழ் படப்பை13, பலர் தொழும் விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர் எனப்படுகிறது. "பொற்றிருமாட கூடப் புராதனக் கவின்” எனக் காஞ்சி நகரின் அழகைக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.14 தீர்த்தம், தலம், மூர்த்தி என்ற வகையில் காஞ்சியின் சிறப்பை இப்புராணம் கூறும்.

காஞ்சியில் கடிகையும், ஓவிய, சிற்ப கலைக்கூடங்களும், பாகூரில் வடமொழிக் கல்லூரியும், பிரம்மபுரிகளும் நிரம்பி இருந்ததைப் பல்லவர் வரலாறு கூறும்.15

காஞ்சிநகர் பல்கலை, பல்சமய, பல்மொழி நகராக அன்று விளங்கியுள்ளது.

உறையூர்

காவிரிப்பூம்பட்டினத்துக்கு முந்திய சோழர் கோநகரமாக இருந்து உறையூர், திரிசிரபுரத்தின் மேற்கேயும், திருவரங்கத்தின் தெற்கேயும் காவிரியின் தென்கரையில் திரிசிரபுரத்தின் ஒரு பகுதியாக இன்று அடங்கிவிட்டது.

முதுகூத்தனாரின் அகநானூற்றுப் பாட்டில் கூடச் சோழர் தலைநகராகவே உறையூர் கூறப்படுகிறது.16

கரிகாலன் இந் நகரிலிருந்து ஆட்சி செய்யத் தொடங்கிய பின்பே, பூம்புகார் பெயர்ந்தான் என்கிறார் பண்டாரத்தார். துறைமுகம் உள்ள இடமாக வேண்டும் என்ற கருத்திலே உறையூரிலிருந்து புகாருக்கு மாறினான் என்றும் கூறுகிறார்.17