பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

217



உறையூர் பற்றிய குறிப்புகள் நூல்களில் அங்கங்கே கிடைப்பது தவிர, நகரமைப்பையும் பிற விவரங்களையும் அறியக் கிடைக்கவில்லை. உறையூரின் ஒரு பகுதி ஏணிச் சேரி என அழைக்கப்பட்டிருத்தல் தெரிகிறது. பல புறப் பாடல்களில், உறையூர் சோழர் தலைநகராகவே கூறப்பட்டுள்ளது. புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இந்நகரை மதில் வளைத்த நிகழ்ச்சி வருதலால், மதிலுடன் கூடிய அரண் உள்ள நகராயிருந்துள்ளது. ஒரு கோழி யானையை எதிர்த்த வீர மண் என உறையூரைப் பற்றிய வரலாறு ஒன்று கூறப்படுகிறது.17 (அ)சிலம்பில் அருகன் கோயில், உறையூரில் இருந்தது கூறப்படுகிறது. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி பற்றிய புறப்பாடல்கள் மதில் முற்றுகை யாவும் உறையூருடன் தொடர்புடையவை எனினும், நகரமைப்பை அறிய அப்பாடல்களில் விரிவான செய்திகள் இல்லை. சிலம்பிலும் 'உறையூருக்குக் கோழி என்ற பெயர் வந்த வரலாறு' உறையூர் மதிற்புறத்துள்ள காவற்காடு என்பன போன்ற குறிப்புகள் தாம் வருகின்றன.

எனவே புகார் புகழ் பெறு முன்பு நன்கு விளங்கிய பழஞ் சோழர் கோநகர் என்ற கருத்துடன் உறையூரைப் பற்றி இங்கு நிறுத்திக் கொள்ள நேரிடுகிறது. அகநானூற்றிலும், புறநானூற்றிலும் சில செய்திகள் வருகின்றன.18

வஞ்சி

சேரர் தலைநகராகிய வஞ்சி, ஆன்பொருநை என்னும் ஆற்றங்கரையில் அமைந்திருந்தது.19 அவ்வஞ்சி மாநகருக்குக் கருவூர் என்றும் ஒரு பெயர் உண்டு.

வஞ்சி மாநகரம் கோட்டை கொத்தளங்களோடு கூடிய அக நகரையும், கோட்டைக்கு வெளியே புறநகரையும் கொண்டிருந்தது.20 வஞ்சி முற்றம் என ஒரு பெயர் கூறப்படுகிறது. -