பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



புறநகரில் இயந்திர வாவிகளும் மலர்வனங்களும் இருந்திருக்கின்றன. தேவர் கோட்டங்களும், சைவ வைணவக் கோயில்களும், பெளத்த விகாரமும் சமணப் பள்ளிகளும், பொழில்களும், பொய்கைகளும், மிகுந்திருந்தன. அவ்விடங்களில் எல்லாம் முனிவர்களும், சான்றோர்களும் நிரம்பியிருந்தனர்.21

குணவாயிற் கோட்டம்

புறநகரில் கிழக்குக் கோட்டை வாயிற்பக்கத்தில் சமண முனிவர்கள் தங்கி வசித்த கோட்டம் ஒன்று இருந்தது. அதற்குக் குணவாயிற் கோட்டம் என்று பெயர். சேரன் செங்குட்டுவனின் தம்பியும், சிலப்பதிகார ஆசிரியருமான இளங்கோவடிகள் இக்கோட்டத்தில்தான் வாழ்ந்திருந்தார்.22

வேளாவிக்கோ மாளிகை

புறநகரின் மற்றொரு புறத்தே வேளாவிக்கோ மாளிகை என்னும் மாளிகை இருந்தது. இது வேள் ஆவிக்கோ என்னும் வள்ளலுக்கு உரியது. சேர அரசர்கள் இம்மாளிகையில் அடிக்கடி சென்று தங்குவது உண்டென்று தெரிகிறது.23

சமயக் கணக்கர்

புறநகரில் சமயக் கணக்கரும், மதவாதிகளும் தங்கியிருந்தமை தெரிகிறது. அளவை வாதி, சைவ வாதி, பிரம வாதி, வைணவ வாதி, வேத வாதி, ஆசீவக வாதி, நிகண்ட வாதி.சாங்கிய வாதி, வைசேடிக வாதி, பூத வாதி முதலியவர்கள் இருந்தமை தெரிகிறது.24 அவர்கள் வாதத் திறன் மிக்கார் எனவும் தெரிகிறது. -

அரண்மனை

சேர மன்னனது அரண்மனை செல்வ வளமுடையதாகவும் மலைபடு பொருள்கள் மலிந்ததாகவும் விளங்கியது.