பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்து 22
அமன்ற வெண்காற் செறுவின்23

நிலைப்படியில் திருமகள் அமைப்புத் தவிர அழகிய மனையின் முன்னிடத்தில் மணல் பரப்பும் வழக்கமும் இருந்தது என்பதையும் அறிகிறோம்.

திருநிலை பெற்ற தீதுதிர் சிறப்பின்
தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து24

அத்தகைய மணல் முற்றத்தில் அழகிய நிறத்தையுடைய அன்னப்பறவைகள் இருக்கும் என்பதையும், அரசன் கோயிலில் சிறப்பான நிலா முற்றம் உண்டு என்பதையும் கூட நெடுநல்வாடையிலிருந்தே அறிய முடிகிறது.

நெடுமயிர் எகினத் தூ நிற வேற்றை
குறுங்கா லன்னமொ டுகளும் முன்கடை
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண்முற்றத்துக்
கிம்புரிப் பகுவா யம்பண நிறையக்
கலுழ்ந்து வீழருவிப் பாடுவிறந் தயல
ஒலிநெடும் பீலி யொல்க மெல்லியற்
கலிமயி லகவும் வயிர்மருளின்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் 25

ஆண் மான்களும், அன்னங்களும் திரியும் முன்பக்கத்தின் நிலை கூறப்படுகிறது. குதிரைகளின் குரல் ஒலி, நிலா முற்றத்துச் செயற்கை அருவி நீரொலி, மயிலின் ஆரவாரம் எல்லாம் மலையின் செறிந்த ஆரவாரம் போலுள்ள அரண்மனை என விவரிக்கப்படுகிறது.

இதுவரை வெளி அலங்காரம் அமைப்புப் பற்றிக் கூறிய (Exterior Decoration) இனி உள் அமைப்பு அலங்காரம் (Interior Decoration) பற்றிக் கூறுகிறார்.