பக்கம்:பழைய கணக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

“இன்னிக்கு ஐயாவுக்குக் கூட்டம் இருக்கு ஞாபகப் படுத்திட்டுப் போகலாம்னு வந்தோம்.”

“எத்தனை மணிக்கு?”

“ஆறு மணிக்கு ஐயா!”

“அப்படித்தான் ஆறு மணிக்குன்னு சொல்வீங்க. ஏழுக்குத் தான் ஆரம்பிப்பீங்க. சரி, போங்க, வந்துடறேன்.”

அந்தத் தள்ளாத நிலையிலும், பிறர் உதவியின்றி நடமாட முடியாத வயோதிகத்திலும் அவர் கூட்டத்துக்குப் போவது அவசியம்தானா என்று என்னுள் ஓர் கேள்வி எழுந்தது.

“இத்தனை வருஷமாகத் தொடர்ந்து கூட்டத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு இதில் அலுப்போ, சலிப்போ ஏற்படவில்லையா?” என்று கேட்டேன்.

“நல்லா கேட்டே போ! மொத மொதல்ல நான் சின்னப் பையனா இருந்தப்போ மொதக் கூட்டத்துக்கு எவ்வளவு உற்சாகத்தோட, ஆர்வத்தோட போனேனோ, அதில் கொஞ்சம் கூடக் குறையாமல் இன்னிக்கும் போய்க்கிட்டிருக்கேன்” என்றார்.

நான் அசந்து போனேன். நான் இன்றைக்கும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அந்த உணர்வை எனக்கு ஊட்டியவர் பெரியார் அவர்கள்தான். உழைப்பின் அருமையை எனக்குக் கற்றுக் கொடுத்த அந்தப் பெரியாரை ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் நினைவு கூர்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/30&oldid=1145699" இலிருந்து மீள்விக்கப்பட்டது