பக்கம்:பழைய கணக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

வேண்டும். விடுதலைப் போரில் குதித்தாக வேண்டும் என்ற தீவிரம் ரத்தத்தைச் சூடாக்கியது. தந்திக்கம்பி அறுப்பது, தண்டவாளம் பெயர்ப்பது. இதெல்லாம் நான் மட்டும் தனியாகச் செய்யக் கூடிய காரியமாய்த் தோன்றவில்லை. எனவே, பக்கத்தில் உள்ள மண்ணடி போஸ்ட் ஆபீஸைக் கொளுத்தி விடுவதென்று முடிவு செய்தேன். ஒரு தீப்பெட்டியுடன் அங்கு போனேன். பெட்டியிலிருந்த எல்லாத் தீக்குச்சிகளையும் ஒன்று சேர்த்துப் பற்ற வைத்தேன். டக்கென்று. தபால் பெட்டியினுள் அவ்வளவையும் போட்டதும் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. உள்ளே இருக்கும் கடிதங்கள் பற்றிக் கொண்டு பெரிதாகி எரிந்து அந்த போஸ்ட் ஆபீஸே தீக்கிரையாகப் போகிறது. நான் பெரிய ஹீரோவாகப் போகிறேன் என்று எனக்குள்ளாகவே கற்பனை செய்து கொண்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு தபால் பெட்டிக்குள்ளிருந்து வெறும் புகை மட்டுமே வந்தபோது பெரும் ஏமாற்றமாயிருந்தது. இருந்தாலும் என் வீரத்தை வெளியுலகுக்குப் பிரகடனப் படுத்திவிட வேண்டும் என்ற ஆவலில் அருகாமையிலுள்ள செக்குமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போன் செய்தேன்.

“போலீஸ் ஸ்டேஷனா? இங்கே மண்ணடி போஸ்ட் ஆபீஸுக்குத் தீ வைத்துவிட்டேன்.உடனே வாருங்கள்”என்றேன்.

“யார் நீ?” என்று கேட்டது. செக்குமேடு.

“நான் ஒரு காங்கிரஸ்காரன். தபாலாபீஸுக்கு எதிரிலேயே காத்திருக்கிறேன். உடனே வாருங்கள். கதர்ச்சட்டை அணிந்திருப்பேன்” என்றேன்.

அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வேன் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பரபரப்போடு இறங்கிய போலீசார் இரண்டு பேர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நேராக என்னிடம் வந்து, “நீதான் போன் செய்தாயா?” என்று கேட்டார்கள். “ஆமாம்.” என்றேன். என்னை அப்போதே கைது செய்து அந்த வேனிலேயே ஏற்றிச் சென்றார்கள். ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் கேஸ் எழுதிக் கொண்டார்கள். அதில் நான் கையெழுத்துப் போட்டதும் மசால் தோசை வாங்கிக் கொடுத்தார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கு எழும்பூர் மாஜிஸ்ட் ரேட் கோர்ட்டுக்குப் போயிற்று.

“குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?” என்று கேட்டார் மாஜிஸ்ட்ரேட்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/32&oldid=1145702" இலிருந்து மீள்விக்கப்பட்டது