பக்கம்:பழைய கணக்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உட்கார்ந்திருந்தார். அவர்தான் திரு வாசன் என்பதை அப்போது என்னால் ஊகிக்க முடியவில்லை. பிற்காலத்தில் அவரைப் பார்த்தபோது அந்தப் பழைய முகம் என் நினைவுக்கு வந்து, “ஒகோ, இவர்தான?” என்று ஊகித்துப் புரிந்து கொண்டேன். நான் அவரிடம் நாலணாவை நீட்டி, “தீபாவளி மலர் வேண்டும்?” என்று கேட்டதும் அவர் உடனே எழுந்து போய், ஒரு மலரை எடுத்து வந்து தூசி தட்டி என்னிடம் தந்தார். எனக்குப் பெருமை பிடிபடவில்லை. வெளியே வந்ததும் ஆவலோடு அங்கேயே திண்ணையிலேயே உட்கார்ந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். புகழ் பெற்ற எஸ். வி. வி. எழுதிய கோயில் யானையை அந்தத் திண்ணையில்தான் படித்தேன்.

கல்கி, துமிலன், பூரி (துமிலன்தான் பூரி) போன்ற எழுத்தாளர்களின் பெயர்கள் எனக்கு அப்போதே பரிச்சயம். அவர்களுடைய கட்டுரைகளும் அந்த மலரில் இடம் பெற்றிருந்தன. அடுத்த இதழ் ஃபாரத்தையும் எடுத்துப் படித்து முடித்தேன். கன குஷியோடு வீடு திரும்பியபோது போட்டோ ஸ்டுடியோ ஒன்று குறுக்கிட்டது. அதில் நுழைந்து, கையிலிருந்த இன்னொரு நாலணாவுக்கு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

வீடு திரும்பியதும், “என்னடா மூர் மார்க்கெட், போயிருந்தாயா?” என்று கேட்டார் வக்கில்.

“இல்லை. தங்கசாலைத் தெருவுக்குப் போயிருந்தேன்” என்று பெருமையோடு விகடன் தீபாவளி மலரைக் காட்டினேன். “இதற்குத்தான் தங்கசாலைத் தெருவுக்கு வழி கேட்டாயா? அசடே, இந்த மலர் நம் வீட்டிலேயே வாங்கி வைத்திருக்கிறேனே! என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதோ?” என்றார் வக்கீல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/51&oldid=1145993" இலிருந்து மீள்விக்கப்பட்டது