உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. உழவன்

அவையடக்கம்

(எண்சீர் விருத்தம்)

அலை கடலின் மலைமுகட்டில் தொடுவா னத்தில்
       அதிகாலைப் பொற்றுகளை விண்ணில் தூவித்
தலை நிமிரும் இளம்பரிதி எங்க ளண்ணா
       தமிழர்களின் தனித்தலைவன் வழியில் வந்த
கலைஞ கருணா நிதியே! சொல்லின் செல்வ!
       களங்கண்ட மறப்புலியே! தமிழர் வாழ்வே!
விலையில்லாத் தாயகத்தின் இருளைப் போக்கும்
       விண்ணொளியே! தமிழ்மறவ! வாழ்க நீடே!
தம்பிகளில் தலைசிறந்த கலைஞ ரேறே!
       தமிழ்நாட்டு மலைச்சாரற் குளிர்பூங் காற்றே!
கொம்புத்தேன் பேச்சாள! கடலா ழத்தே
       குளித்தெடுத்த நன்முத்தே! பகையை வீழ்த்தும்
அம்பொத்த செயல்மறவர் சங்க கால
       ஆன்றோரின் புறப்பாட்டோ இளைஞர் நெஞ்சில்
தெம்பேற்றும் எழுத்தாள! தமிழர் வாழ்வின்
       திருக்குவளை மா நிதியே! வாழ்க நீடே!
முன்னகத்திற் குடியேறி மக்கள் நெஞ்சில்
       மூன்றெழுத்தை நிலைநிறுத்தி இருண்ட வானத்
தென்னகத்தில் ஒளியேற்றி மக்கள் வாழும்
       திசையெல்லாம் தமிழ்பரப்பி வாழ்ந்த மேலோன்
என்னகத்தில் தம்பியரின் அகத்தி லெல்லாம்
       என்றென்றுங் குடிகொண்ட அறிஞர் அண்ணா
பொன்னகத்தின் நல்விளைவே முதலமைச்சே!

       புதுப்பொலிவே! அஞ்சுகத்தின் நிதியே! வாழ்க!