பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. அன்பின் வழியது உயிர்நிலை

தமிழ்த்தாய் வாழ்த்து

(வஞ்சித் தாழிசை)

தீந்தமிழின் சிறப்பெண்ணா
மாந்தர்கள் மனமென்னாம்?
வேந்தர்கள் விறலென்னாம்?
சீந்தாரோ சிறியோர்கள்?

நாப்பிறந்த நமது தமிழ்
காப்பதற்குக் கருத்தில்லார்
வேப்பிலையை மிகுத்திடுவரி!
பூப்பில்லாப் புதுப்பெண்ணாம்!

எக்குறையும் இலாததமிழ்
அக்கறையே அடையாதார்
எக்குறையும் இலரெனினும்
மக்களென மதிப்பவர்யார்?

புதுவைச் சிறப்பு
(பஃறொடை வெண்பா)


நீலக் கடலும் நெடுவானும் ஒன்றாகும்
கோலத்தைக் கண்டிருப்போர் கூட்டத்தை என் சொல்வேன்!
நெய்தற் கழிபூத்த நீல மலர்விழியோர்
கையிற் சிறைபுகுந்த கன்னல் மொழிச்சிறுவர்
அன்னையின் தோளேறி ஆடை பிடித்திழுத்துத்
தென்னை முகிழ்பாளை போலச் சிரித்திடுவர்!
தண் கடலின் ஓரத்தே தாழை மடல்பூக்க

வண்டோடி வந்தே வளையில் புகுந்திருக்கும்!