பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



138

விண்குலத்தார் மீனினங்கள் இடையெழுந்த திங்கள்
மெல்லியலார் நல்லறிவு மீதுாரப் பெற்றுப்
புண்குலத்தார் துயர்களையப் புதுப்போக்கைக் கொண்டார்!
புதுவிளைவு பூத்ததுவே விடுதலையைக் கண்டோம்!

அறவழியை மக்களெலாம் ஒன்றாகச் சேர்ந்தே
அமைதியாகக் கிளர்ச்சிசெய்ய இன்சொல்லால் ஊக்கி
மறவழியைக் கனவினிலும் எண்ணாத காந்தி -
வழிவகுத்தார்! அதன்விளைவே விடுதலையாம்! ஆன்ற
உறவுவழி கொள்வோம்நாம்! பிறப்பொக்கும்! இந்த
ஊராட்சி நம்மாட்சி என்கின்ற உண்மை
நிறைவழியா திருக்கட்டும்! அதுமக்கள் வாழ
நிலைநாட்டும் விடுதலையாம்! விடுதலையே வாழ்க!


தாழ்கின்ற முடியாட்சி போலின்றி எந்தத்
தனியாரும் நட்டாட்சி கைக்கொள்ளக் கூடும்!
வாழ்கின்ற மக்களெலாம் இந்நாட்டு மன்னர்!
வருவாயும் போவாயும் யாவர்க்கும் சொந்தம்!
சூழ்கின்ற நல்லின்பம், தொடர்கின்ற துன்பம்
துளியளவே யானாலும் யாவர்க்கும் பங்காம்!
வீழ்கின்ற நிலைவரினும் வெற்றிகொள்வோம் என்ற
வீரத்தை விளைப்பதுதான் விடுதலையின் போக்கே!

ஆற்றாமை என்பதில்லை விடுதலைநல் வாழ்வில்: -
அவரவரின் தோள்வலிமை சொல்வலிமைக்கேற்பப்
போற்றாமை கொள்வதில்லை; புகழ்மறப்ப தில்லை:
புத்துணர்வின் நல்லுழைப்பு/தாய்நாட்டின் பற்று
மாற்றாமை எனுமெண்ணம் மக்களின எண்ணம்
வாய்பேசா திருப்பதில்லை; வழிதவறிப் போனால்
வேற்றாமை புகவழியை விடுவதில்லை யாரும்
விடுதலையே உயிரினத்தின் விடுதலையே வாழ்க!