28. தொழில் வளர்ப்போம்!
(வெண்கலிப்பா)
கார்முழக்கம் வானில்; கடல்முழக்கம் நீள்கரையில்;
ஏர்முழக்கம் சிற்றூர் இடமகன்ற படப்பையிலே;
தென்றல் மணம்பரப்பச் சில்வண்டு யாழ்மீட்ட
மன்றல் அயரும் மணவறைகள்; வாழ்த்தொலியைக்
கேட்டு மனங்குளிரக் கீழ்கண்ணால் காதலரை
நோட்டம் விடுகின்ற நூலிடையார் கன்னியர்கள்
நடைபயிலும் நம்நாட்டில், தென்னாட்டில், தமிழகத்தில்,
மடைவற்றா நன்செய் வளம்பெருக்கும் முதலமைச்சர்
கருணா நிதியார் அரசோச்சுங் காலத்தில்
உருவாகும் பொற்காலம் உமதுபொற் காலமே!
முதலில் தமிழ்வாழ்த்தி முதலமைச்சை வாழ்த்திப்
புதுமைப் பொலிவேற்றும் பொற்காலம் வாழ்த்துவமே!
கற்காலந் தாண்டிக் கவின்சேர் தமிழகத்தில்
பொற்காலங் கண்டென்றும் பூரித்த மக்கள்நாம்!
பிற்காலம் வேற்றார் பிடிப்பில் இருந்ததனால்
நெற்பதராய் ஆனோம்; நிலைகுலைந்தோம்; என்றென்றும்
பொருள்மிகுதி கண்டாவே பொற்காலங் கண்டிடலாம்!
வருவாய் மிகமிகவே வாழ்க்கை வளங்கொழிக்கும்!
வழிவழியே மக்கள் வாழ்க்கையின் தேவைக்குத்
தொழிலைத் துணைகொண்டார்; நாமும் தொழில் வளர்ப்போம்!
உழவுத் தொழில்வளர்ப்போர் உயிரை வளர்ப்போராம்!