உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

ஏர்தேக்கி நன்செய் இடையிடையே வரப்பிட்டு
நீர்தேக்கிச் செந்நல் நிரைதேக்கிப் பயிரிட்டால்
உயிருக்குப் பசியில்லை; ஊனுக்கு நோய்இல்லை;
அயலார்க்கும் ஈந்தே அதனால் பொருள்பெறலாம்;
சாலை நடவுகளும் சாயாத நெல்விதையும்
சூலைநோய் மாற்றுந் துளிமருந்தும் நல்லுரமும்
உழவர்க்கு நமதரசு ஓடோடி வந்து
வழங்கப் பயிர்த் தொழிலை வளர்ப்போம்; வளர்ப்போமே!
சிற்றூரின் உள்ளே திறந்த மனை வெளியில்,
சுற்றியுள்ள வேலியிலே துளிர்த்திருக்கும் நொச்சிக்
கொம்பொடித்துக் கூடை குறுந்தட்டு செய்திடுவோம்!
வம்பளக்கும் காலம் வருவாயை நல்கிடுமே!
நீண்ட பனை தென்னை நெட்டோலைக் குருத்தெடுத்து
வேண்டும் பொருள்பலவும் விளையாட்டாய்ச் செய்திடுவோம்!
மண்பிசைந்து பானை வடிதட்டு தோண்டி
கண்பறிக்கும் அழகழகுக் கைப்பொம்மைசெய்திடுவோம்!
கோழி வளர்ப்போம்; குறும்பாடு நாம்வளர்ப்போம்;
தாழி நிறைக்கத் தரும்பால் எருமைகளைக்
கன்றைப் பசுவைக் கவின் மிகுந்த காளைகளை
என்றும் வளர்ப்போம்; எளிஞர் தொழிலிதுவாம்!
பருத்தி நூல் வேட்டி, பலவண்ண மேலாடை,
திருத்தமுற நெய்த சிற்றாடை, பட்டாடை,
நெய்து தொழில் வளர்ப்போம்; நிலைவருவாய்பெற்றிடுவோம்!
எய்திடுவோம் இன்பம்; இழிதொழிவே இல்லையென்போம்!
எத்தொழிலைச் செய்தாலும் எவரெவரே யானாலும்,
அத்தொழிலின் மேன்மையே அவரவரின் பொற்காலம்!
குடிசைத் தொழிலென்வே கூறிடுவர்; ஆனாலென்?

குடிசைத் தொழிலே குடி செழிக்கும் நற்றொழிலாம்!