165
குலவிளக்காய்ப் பெண்ணொன்று குடிவிளக்காய் ஓராண்
கொண்டிடுவோம் பெருவிளைச்சல் வாழ்விற்குப் போதும்
நலம் கொழிக்கும் இனம் செழிக்கும் நம்நாடும் நாட்டின்
நல்லரசும் பெருவளமும் நாமடைவோம் நீடே!
கூர்நடத்தும் கண்ணாளே குலவிளக்கே பெண்ணே!
குடிநடத்தக் குழந்தைகளை நல்லபடி நடத்தச்
சீர்நடத்த வேண்டுமெனில் ஏர்நடத்த வேண்டும்
செயலுக்கும் பேச்சுக்கும் இதுவேமூச் சாகும்
ஏர்நடத்தும் தார்க்கோலே என்றென்றும் எங்கும்
இடும்வித்தால் நல்விளைச்சல் தனிபெருகச் செய்து
பார்நடத்தும் செங்கோலாய்ப் பகைகடத்தும் வாளாய்
பல்லாண்டு பார்வாழ்த்த நிலைத்திருக்கக் கண்டோம்.
ஊற்றங்கால் வயல்வெளிக்கு முன்கூட்டி விட்ட
உயர்மணியாம் நல்விதைகள் வளர்ந்திருக்கும் பச்சை
நாற்றங்கால் பயிர்முடிகள் மணிமுடிகள் ஆகும்
நடுமுன்னர் மருந்தடிக்கக் கருத்திருக்க வேண்டும்
சேற்றங்கால் புண்ணாகும் பலபிள்ளைப் பேறு
சிந்தித்தால் இக்குறையை நீக்கிடவும் கூடும்
ஆற்றுக்கால் தடைபோட்டு விளைவாக்கல் போல
அன்பீனும் குழந்தைக்கும் தடைபோட வேண்டும்.
நுரைகொழித்தே ஓடிவரும் கால்வாயில் ஏரி
நுழைவினிலே தப்பிவந்த வரால்மீன்கள் நன்செய்க்
கரையினிலே பாய்மடையில் கலாம்விளைக்கக் கண்ட
கதிர்விளைக்கும் நல்லுழவன் மனையாள்கை ஒக்க
நிரைபயிரை அழிக்கட்டும் எனவிட்டா விடுவான்?
நீள்விளைவின் நாட்டம்போல் அவரவரின் இல்லத்
திரைமறைவில் குடும்பநலப் பெருநோக்கம் வேண்டும்
சீர்பெருகும் வளம்பெருகும் செழுமைநலம் உண்டாம்.