பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

விண்ணாட்டின் செங்கதிரோன் விளை நிலத்தின் வித்தாம்!
விரவியுள்ள நெற்பதர்கள் காற்றினிலே ஓடும்
உன் நாட்டைத் தாய்நாட்டை உனை வளர்க்கும் நாட்டை
உயிர்போல நீஈன்ற உன் பிள்ளை போலத்
தென்னாட்டின் கடல்முத்தே இன்ப மனையாட்டி
செருக்களத்தில் சீறிவரும் சிங்கத்தைப் போன்று
பொன்னாட்டைக் காப்பதற்கே ஒன்றிரண்டு பிள்ளை
புவிக்களித்தல் உன்கடமை என்கடமை யாகும்.

இன்றுள்ள விடுதலைகள் எவ்விளைச்சல் ஆகும்?
எழுச்சியுற்ற நல்லறிஞர் அறிவெழுந்த வித்து
கன்றாகிச் செடியாகி மரமாகிப் பூத்துக்
காயாகிக் கனியாகிக் கடைத்தெருவுக் கேகி
நன்றாக விலையாகிப் பொருளாகி மக்கள்
நலமாகி வளமாகி அரசாகி நாளும்
குன்றாது நிலைத்திருக்கக் காண்கின்றோம் ஆன்றோர்
குடும்பத்தின் குறியோடே வித்திட்டுச் சென்றார்.

கல்லூரி மொழிபயின்று கலைபயின்று பல்லோர்
கைத்தொழிலை நல்லுழவை விரும்பாது நாளும்
தல்லரசுப் பணிதேடி நடந்தலைந்து சோர்ந்து
நலிகின்றார்; இஃதேதோ நம் நாட்டின் பித்து!
புல்லுழுது வித்திடுதல் பொன்விளைக்கும் செய்கை!
புரியாதோர் இனியேனும் ஒன்றிரண்டு பெற்று
நல்லுழவை இல்லத்தில் நடத்திடுவோம்; வாழ்வோம்

நலிவில்லை; நல்லரசு நிலைத்திருக்கும் நீடே!

நாள்: 15-1-1972 மாலை 6-10 மணி.

இடம்: புதுவை வானொலி நிலையப் பொங்கற் கவியரங்கம்.

தலைவர்: கவிஞரேறு வாணிதாசன்.

தலைப்பு: ‘விதையும் விளைச்சலும்.’