6. கவித் தூது
(எண்சீர் விருத்தம்)
கற்றவரே! பெரியோரே! கலைக்கழகம் கண்ட
காளையரே! கன்னியரே! காவிரிசூழ் நாட்டீர்!
சுற்றமுடன் கவியரங்க விழாக்காண வந்த
தோழர்காள் ! தோழியர்காள்! மணிவயிறு காத்துப்
பெற்றெடுத்த தாய்மாரே! வற்றாத பொன்னிப்
பெருநாட்டை வாழ்விக்கும் கவிஞர்காள்! உள்ளப்
பற்றோடு தலை தாழ்த்திக் கைகூப்பி எண்சீர்ப்
பாப்பாடி வணங்குகின்றேன்! என் வணக்கம் ஏற்பீர்!
1
வான் தாவும் தெங்கிடையில் வாழைமரம் தாவும்;
வயல்பூத்த செங்கரும்பின் அயல்பூக்கும் செந்நெல்;
தேன் தாவும் வண்டோடு செம்மூக்குக் கிள்ளை
செடிதாவும்; தோப்பெங்கும் பூங்கொடிகள் தாவும்:
மான் தாவும் நீண்மாட முன்றில்லம் தோறும்
மயில் தாவும்; மங்கையரின் மணிக்குரலைக் காட்டிக்
கான்தாவும் கருங்குயில்கள்; கரை தாவும் வற்றாக்
காவிரிசூழ் சிராப்பள்ளிக் கலைக்கழகம். வாழ்க!
2
அணிமாடப் பேரூராம் சிராப்பள்ளி வாழ்வோர்
அன்பாக்கம் கலைக்கழகம் அவர்தொண்டு வாழ்க!
பணிவோடு தீந்தமிழைப் பல்கலையைப் பேணிப்
பலர்புகழ வாழ்கின்றார்! வெள்ளிவிழாக் கண்டாரி!
துணிவோடு பகையெதிர்த்துத் தூயதமிழ் காத்துத்
துறைதோறும் துறைதோறும் நற்றொண்டைச் செய்தே
மணியோசை போல் நகரக் கலைக்கழகம் நீடு
வாழ்கவென வாழ்கவென வாழ்த்துகின் றேனே!
3