8. போர்ப்பாணி
(எண்சீர் விருத்தம்)
வான் தோன்றி, வளிதோன்றி, நெருப்புத் தோன்றி
மண்தோன்றி, மழைதோன்றி, மலைகள் தோன்றி,
ஊன்தோன்றி, உயிர்தோன்றி, உணர்வு தோன்றி,
ஒளிதோன்றி, ஒலிதோன்றி வாழ்ந்த அந்நாள்
தேன்தோன்றியதுபோல மக்கள் நாவில்,
செந்தமிழே! நீதோன்றி வளர்ந்தாய்! வாழி!
கான்தோன்றி மணக்கின்ற மலர்வண் டைப்போற்
கவிபாடி உனையென்றும் வணங்கு வேனே!
1
கடலோர நீளலைகள் இரைந்தெ ழுந்தே
கரைமோதும்; முரசார்க்கும்; கரையோ ரத்து
மடற்றாழை யிடைப்புன்னை மலர்கள் தூவி
‘மாற்றானை வெல்க!’வென அவையை வாழ்த்தும்
இடமகன்ற சீர்ப்புதுவை முதல மைச்சே!
இன்கவிதைக் கவியரங்கத் தலைவ! என்றன்
படைப்பான போர்ப்பரணி கேட்க வந்த
பாவலரே! பெரியோரே! வணக்கம் ஏற்பீர்!
2
உலகத்தில் பலநாட்டை வௌவி, வான
உயர்பரிதி சாயாத நாட மைத்துத்
தலை நிமிர்ந்தே அரசாண்ட ஆங்கி லேயத்
தனியரசைப் பாரதத்தில் முறியடித்தோம்!
விலையுயர்ந்த தாயகத்தின் விடுத வைக்கே
வெற்றிமுர சடித்தவர் நாம்! எங்கும் என்றும்
மலையெதிர்த்து வந்தாலும் அஞ்ச மாட்டோம்!
வந்தபகை விடமாட்டோம்; வலியச் செல்லோம்!
3