உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

மதியுளோர் கேட்பார்! அன்னோர்
       வாக்கிலும் உண்மை உண்டாம்
புதுமையில் புதுமை காணல்
       புதுமையின் போக்கென் பேனே! 3

பழமைத்தாய் ஈன்ற சேயே
       பச்சிளம் புதுமை! அந்தக்
குழவியே வளர்ந்து தேய்ந்து
       கூனிய பாட்டி யாவாள்!
கிழவியும்; கிழவி தந்த
       கிளிமொழிக் குமரிப் பெண்ணும்
பழமையும் புதுமை யும்போல்
       பாரினில் நிலவக் கண்டோம்! 4

தேவையும், தேவைக் கேற்ற
       திறமையும் வாய்க்கப் பெற்றால்,
பூவையும் பூக்க வைக்கும்
       புதுமைக்கு வழியுண் டாகும்!
கோவையும் மாற்றக் கூடும்!
       குடிமுறை மாற்றக் கூடும்!
பாவையை மாற்றக் கூடும்!
       பழமையில் புதுமை யாமே! 5

புதியதோர் உலகை எண்ணிப்
       புறப்பட்டேன்! இன்பக் கிள்ளை
மதுமலர்க் குழலி இல்லாள்,
‘வயலுக்கா?’ என்றாள் ‘இல்லை;
       அதுவொரு செய்தி’ என்றேன்!
அருகினில் முன்கை ஊன்றி,
       மெதுவாகச் சொல்க!' என்றாள்;
உடம்படு மெய்யள் ஆனாள்! 6