பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

பிள்ளை மதிநெற்றிப் பேரழகி, 'சிந்தனையின்
வெள்ளத்தில் மூழ்கி மிகநேரம் ஆனதுவோ?

பக்கம் இருக்கும் பாவைமேல் கண்ணின்றித்
திக்குத் தெரியாத் திசையாதோ?' என்றாள்!

'வயிரவாள்!' என்றேன்! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
வயிரவாள்கண்டிங்கே வாய்திறக்காப் பெண்ணுண்டோ?

'காதுக் கணி' என்றாள்! 'காதுக் கணி'என்றேன்!
'ஏது? மதிமயக்கோ? என்சொல்லை மீண்டுமே

சொல்லும் குறும்போ? குறும்பு தவிர்க!'என்றாள்!
'அல்போலும் கூந்தல் அழகே! எனதுயிரே!

இந்தா! இதைக்கேள் எனதாசான் பாவேந்தன்
தந்த வயிரவாள்! சற்றே நீ கேளேடி!

முன்னாள் முடிவேந்தர் முண்டி வரும்பகையைத்
தன்னிடையில் ஓம்பித் தலைவீழ்த்தி வந்ததுவாம்!

பின்னாளிற் சாதி மதக்கொடுமைப் பேர்சொல்லி
இன்னல் இழைத்தோர், இடைப்புகுந்து நல்வாழ்வைச்

சாய்த்தோரி, உழைப்பெல்லாம் தான்தன் தென்றுமே
ஏய்த்தோர்கள், இன்றமிழைக் கல்லாமல் ஏப்பமிடும்

குட்டை மனத்தோரி, குறுநரிகள் யாவரையும்
நெட்டை மகனே! நினதுதோள் நானறிவேன்!

வெட்டிநீ வீழ்த்தியே வெற்றிகொள் என்றிடையில்
கட்டும் வயிரவாள் காண்நீ! எனதாசான்

இன்றில்லை! உண்மை! இருந்தாலும் என்வாழ்வில்
என்றும் மறவேன்! எதிர்த்துவரும் எப்பகையும்

நின்று தனித்தெதிர்ப்பேன் நீஎனது தோள்கண்டு
குன்றாதே! இவ்வயிர வாள் கூர்மை குன்றவில்லை!