உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. நாடக ஆசிரியர் அண்ணா

தமிழ் வாழ்த்து
(குறள் வெண்பா)


அன்னைத் தமிழ்த்தாயே! அண்ணாவை நான்பாடும்
சென்னைக் கவிசிறக்கச் செய்!

(நேரிசை வெண்பா)


அண்ணா பிறந்த அழகு தமிழகத்தில்
அண்ணா1 பிறந்த தமிழே!எம்—அண்ணாவைச்
செந்தமிழாற் பாடச் செழுங்கவிதை நல்வளத்தைத்
தந்தாள்! தலை தாழ்த்தி னேன்!

நாடகத்து2 நற்றமிழே! நானுன்னைப் பாடவே
நாடகத் தாசிரியர் நம்மண்ணா—ஈடில்
பெருஞ்செல்வம் அண்ணா பிறப்பென்னும் செல்வம்
அருகிருந்து காத்தே அருள்!

அவையடக்கம்


கடலோர நீளலைகள் இரைந்தெ ழுந்தே
கரைமோதும்; முரசார்க்கும்! கரையைச் சூழ்ந்த
இடமகன்ற சென்னை நகர் அமைச்ச ரேறே!
இன்கவிதைக் கவியரங்கத் தலைவ! அண்ணா
படைமறவ! கலைக்கருணா நிதியே! செந்தேன்
பரிமாற வந்துள்ள புல்வீர்! மன்றத்(து)
இடையுள்ள பெரியோரே! ஈன்றெடுத்த

என்னருமைத் தாய்மாரே! வணங்கி னேனே!