உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

நாடகத்தைத் தீட்டி அளித்தார் நமக்கெல்லாம்!
நாடகமே! நீவாழ்க! நற்கலையே! நீவாழ்க!
நல்லிசையும் பேச்சும் கதையும் நனிசிறக்க
வல்லோர்கள் ஆக்கியதே வண்டமிழ் நாடகமாம்!
உள்ளத் துணர்வை உடலசைவாற் காட்டியே
உள்ளத்தில் நற்கருத்தை ஊட்டல் அதன் குறிக்கோள்!
நாட்டுக்கு நாடு நடைமுறைகள் வெவ்வேறாம்!
நாட்டுக்கு நாடு கலைமுறைகள் வெவ்வேறாம்!
நாளாக நாளாக மக்கள் மனமாற்றம்
ஆளும் தகைமை அறிந்து திருத்துவது
நாடகத்தால் அன்றி நடவா தெனவுணர்ந்தோர்
ஏடகத்தால் தீட்டி எழுச்சியை ஊட்டினரே!
ஓவியத்தைக் கண்டே உணரலாம்! வேறென்னாம்?
காவியத்தைக் கற்றே களிக்கலாம்! வேறென்னாம்?
பாடுவதைக் கேட்டுவாய் பார்த்திருப்போம்! [பின்னென்னாம்?
நாடகத்தால் அன்றி நலமடைந்த நாடுண்டோ?
மக்கள் மனத்தை வழிப்படுத்தி மாற்றுகின்ற
சொக்குப் பொடிமருந்து தூயதமிழ் நாடகமே!
பிள்ளை மதிநெற்றிப் பேரழகி! இல்லாளே!
கள்ளத் தனமாகக் காலத்திற் கொவ்வா
அடிமைக் கருத்தும், அறிவை மறைக்கும்
மிடிமைக் கருத்தும் மிகநிறைத்தே நாடகத்தை
நாட்டில் உலவ நமையேய்த்தோர் விட்டனரே!
நாட்டில் இவரெல்லாம் நாடக ஆசிரியர்
கேட்டாற் சிரிப்பாய்! கிளிமொழியே இன்னுங்கேள்:

பாட்டெல்லாம் பாட்டாகா! நாடகப் பண்பதுவே!